Published : 20 Dec 2024 12:41 AM
Last Updated : 20 Dec 2024 12:41 AM
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக தேடுதல் குழு அமைத்து அரசு எடுத்த நடவடிக்கை மாநில அரசு பல்கலைக்கழக சட்டப்பிரிவுகளுக்கு உட்பட்டு எடுக்கப்பட்ட முடிவு என்று ஆளுநரின் குற்றச்சாட்டுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பதிலளித்துள்ளார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக புதிய துணைவேந்தரை தேர்வுசெய்வதற்காக தமிழக அரசு அமைத்துள்ள தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம்பெறவில்லை என்றும் இது யுஜிசி விதிமுறைகளுக்கும் உச்சநீதிமன்ற உத்தரவுக்கும் முராணனது என்று பல்கலைக்கழக வேந்தரான தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியிருந்தார். அதோடு யுஜிசி பிரதிநிதியுடன் கூடிய தேடுதல் குழுவை நியமித்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு அறிவுரை வழங்கியிருந்தார். இந்நிலையில், ஆளுநரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் உயர்கல்வித்துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணைவேந்தருமான கோவி.செழியன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாநில அரசு பல்கலைக்கழகங்களின் சட்டப்பிரிவுகளின் படி அமைக்கப்பட்ட தேடுதல் குழுவினால் பரிந்துரை செய்யப்படும் 3 நபர்களில் ஒருவரை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக வேந்தரான ஆளுநர் நியமனம் செய்வார். இதுவரை இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படியே தமிழக அரசால் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர்களை தேர்வுசெய்வதற்கு பல்கலைக்கழகங்களின் சட்ட விதிகளின்படி 3 பேர் அடங்கிய தேடுதல் குழு அமைத்து அரசிதழில் வெளியிடப்பட்டது. ஆனால், தேடுதல் குழுவில் 4-வது நபராக யுஜிசி உறுப்பினரின் பிரதிநிதி இடம்பெற வேண்டும் என்று தமிழக ஆளுநர் முதல்வருக்கு கடிதம் வாயிலாக வலியுறத்தினார்.
பல்கலைக்கழக துணைவேந்தரரை தேர்வுசெய்ய அமைக்கப்படும் தேடுதல் குழுவை அறிவிக்கையாக வெளியிடுமாறு ஆளுநர் அரசுக்கு பரிந்துரை மட்டுமே செய்ய முடியுமே தவிர, தன்னிிச்சையாக தேடுதல் குழுவை அமைத்து அறிவிக்கை வெளியிட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. மேலும், ஆளுநரின் அறிவிக்கைகளை எதிர்த்து அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களின் சட்ட விதிகளின்படி, துணைவேந்தரை தேர்வுசெய்ய அமைக்கப்படும் தேடுதல் குழுவில் ஆளுநரின் பிரதிநிதி, அரசின் பிரதிநிதி, பல்கலைக்கழக செனட் பிரதிநிதி ஆகிய 3 பேர் மட்டுமே இடம்பெற முடியும். கல்வி என்பது பொது பட்டியலில் வருவதால் மாநில அரசு யுஜிசியின் நெறிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டிய கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தற்போது சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை நியமிக்க 3 பேர் அடங்கிய தேடுதல் குழு அமைத்து அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு இதுதொடர்பான அறிவிக்கை அரசிதழில் வெளியிடப்பட்டது. இதில் எந்தவித விதிமீறல்களும் இல்லை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட விடாமல் பல்வேறு இடையூறுகளை பல வகையிலும் ஆளுநர் செய்து வருகிறார். துணைவேந்தர் தேடுதல் குழு அமைப்பு விவகாரத்தில் ஆளுநரின் அனுப்பியுள்ள கடிதம் அதன் ஒரு பகுதிதான்.
பல்வேறு மாநிலங்களைக் கொண்ட இந்தியாவில் அந்தந்த மாநில தேவைகளுக்கு ஏற்ப உயர்கல்வி அமைப்பை அமைத்துக்கொள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு அதிகாரமும் உரிமையும் உள்ளது. பல்கலைக்கழக வேந்தர் என்ற பதவிவழி பொறுப்பை பயன்படுத்தி அரசு பல்கலைக்கழக சட்டப்படி எடுக்கப்படும் நடவடிக்கைகளை முடக்குவது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல.
ஆளுநர் சட்டத்தை தவறாக கையில் எடுத்துக்கொண்டு செயல்முறைகள் வெளியிடும் போக்கை அரசு கவனித்துக்கொண்டுதான் இருக்கிறது. பல பல்கலைக்கழகங்களில் பல மாதங்களாக துணைவேந்தர்கள்இல்லாமல் செயல்படுவதை பற்றி சிறிதும் கவலைப்படாமல் ஆளுநர் நடந்துகொள்வது மாணவர்கள் நலனுக்கு எதிரானது. மாணவர்களின் நலன் கருதி மாநில ஆளுநர் பல்கலைக்கழக சட்டத்துக்கு உட்பட்டு அமைக்கப்பட்ட தேடுதல் குழுவுக்கு ஒப்புதல் அளிப்பதே அவர் வகிக்கும் பதவிக்கு அழகு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு , சட்டப்பேரவை மூலம் நிறைவேற்றப்படும் சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவது ஆளுநரின் கடமை. இனியாவது ஆளுநர் தனது செயல்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT