Published : 20 Dec 2024 12:38 AM
Last Updated : 20 Dec 2024 12:38 AM

மாதம் ரூ.3 ஆயிரம் தொகுப்பூதியத்தில் சத்துணவு மையங்களுக்கு 8,997 உதவியாளர்கள் நியமனம்

கோப்புப் படம்

மாதம் ரூ.3 ஆயிரம் தொகுப்பூதியத்தில் சத்துணவு மையங்களில் 8,997 சமையல் உதவியாளர்களை நியமிக்க சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் செயலர் ஜெயஸ்ரீ முரளீதரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 43,131 சத்துணவு மையங்கள் இயங்கி வருகின்றன. ஒரு சத்துணவு மையத்தில் அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் என 3 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். தற்போது காலியாகவுள்ள மொத்த பணியிடங்களில் அவசர அவசியம் கருதி 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களை மாதம் ரூ.3 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நிரப்ப சமூகநல ஆணையர் அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

அவரது கருத்துரு பரிசீலிக்கப்பட்டு, 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களை ரூ.3 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நிரப்ப அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு நியமிக்கப்படும் பணியாளர்களில் 12 மாதங்கள் திருப்திகரமாகப் பணியை முடிப்போருக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும். இந்த பணிக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x