Published : 20 Dec 2024 12:25 AM
Last Updated : 20 Dec 2024 12:25 AM
ஈரோடு: தமிழக அரசின் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தால் 2 கோடி பேர் பயனடைந்துள்ளனர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழக அரசின் சுகாதாரத் துறை சார்பில் செயல்படுத்தப்படும் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் 2021 ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இயன்முறை சிகிச்சை, டயாலிஸிஸ் என்று தொற்றா நோய்களில் பாதிக்கப்பட்டோரின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளித்து, மருந்து வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயனடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியை தொட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் நஞ்சனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தராம்பாள் (55) என்பவர் இத்திட்டத்தின் இரண்டு கோடியாவது பயனாளியாவார். 2 நாள் பயணமாக ஈரோட்டுக்கு நேற்று வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், நஞ்சனாபுரம் சென்று சுந்தராம்பாளை சந்தித்து, மருந்துப் பெட்டகத்தை வழங்கி நலம் விசாரித்தார். தொடர்ந்து, தொடர் சிகிச்சையில் உள்ள வசந்தா (60) என்பவரை சந்தித்த முதல்வர், அவருக்கும் மருந்துப் பெட்டகம் வழங்கினார். அப்போது, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சு.முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, “மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் 2 கோடி பேரும், தொடர் சேவை என்ற வகையில் 4.29 கோடி பேரும் பயனடைந்துள்ளனர். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 14,000-க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் மக்கள் பயன்பாடு இல்லாத பகுதிகளில் 1,700 இடங்களில் அம்மா கிளினிக் தொடங்கப்பட்டது. ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. இந்த திட்டத்தால் மக்களுக்குப் பயனில்லை.
அதே நேரத்தில் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தைப் பாராட்டி ஐ.நா. சபை விருதுவழங்கியுள்ளது” என்றார். முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்களைக் கண்டறிந்து, உரிய சிகிச்சை அளிப்பதில் புதுப் புரட்சி, ஐ.நா. அமைப்பின் விருது எனச் சாதனைச் சரிதம் எழுதிவரும் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் இரண்டு கோடியாவது பயனாளிக்கு மருந்துப் பெட்டகங்களை வழங்கினேன்.
மருத்துவமனைகளை நாடிச் செல்லவோ, வீட்டுக்கு மருத்துவர்களை வரவழைக்கவோ வசதியில்லாத எண்ணற்றோருக்கு வீடு தேடிச் சென்று ‘பிசியோதெரபி’ அளித்து வாழ்வில் ஒளியேற்றும் சாதனையையும் சப்தமின்றிப் படைத்து வரும் இத்திட்டத்தின் வெற்றிக்குக் காரணமான 14 ஆயிரம் மருத்துவப் பணியாளர்களுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT