Published : 20 Dec 2024 12:20 AM
Last Updated : 20 Dec 2024 12:20 AM
சேலம்: மக்கள் எதிர்பார்க்கும் கூட்டணியை அமைப்போம் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
இந்திய ஜனநாயக கட்சி, அமமுக, பாமக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி சேலம் மாவட்டம் ஆத்தூரில் நேற்று நடைபெற்றது. இதில் பழனிசாமி பேசியதாவது: திமுகவை ஒழிக்க வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட கட்சி அதிமுக. இக்கட்சியில் இணைவோருக்கு எப்போதும் உரிய மரியாதை தரப்படும். அம்மா மினி கிளினிக் திட்டம், தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல திட்டங்களை திமுகஅரசு ரத்து செய்துவிட்டது.
திமுக தேர்தல் அறிக்கையில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை 120 நாட்களாக உயர்த்துவதாக அறிவித்தனர். ஆனால் இதுவரை அதை செயல்படுத்தவில்லை. குடி மராமத்து திட்டத்தையும் நிறுத்திவிட்டனர். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போட்டுவிட்டது.
தமிழகத்தில் தினமும் பாலியல் வன்கொடுமை நடக்கிறது. சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இதுவரை கஞ்சா புழக்கத்தைக் கட்டுப்படுத்தவில்லை. சொத்து வரி, மின் கட்டணம் என அனைத்தும் உயர்த்தி, மக்களுக்கு மிகுந்த சுமையைக் கொடுக்கின்றனர். கூட்டணியை நம்பித்தான் திமுக தேர்தலில் போட்டியிடு கிறது. ஆனால், அதிமுக மக்களை நம்பியே தேர்தலை சந்திக்கிறது. வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் பொதுமக்கள் எதிர்பார்க்கும் கூட்டணியை அதிமுக அமைக்கும். இவ்வாறு பழனிசாமி பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பழனிசாமி, “மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்த சர்ச்சைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். அது என்னுடைய கருத்துதான்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT