Published : 19 Dec 2024 09:05 PM
Last Updated : 19 Dec 2024 09:05 PM
நாகர்கோவில்: கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை ஆகியவற்றை இணைக்கும் கண்ணாடி கூண்டு பாலத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 30-ம் தேதி திறந்து வைக்கிறார் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா மற்றும் அதிகாரிகள் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை முதல் விவேகானந்தர் பாறை வரை சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டு வரும் கண்ணாடி இழை கூண்டு பாலத்தினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், “அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவி 25-ம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சியை உலகத்தமிழர்கள் அனைவரும் கொண்டாட முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அதை கருத்தில் கொண்டு உலகத்தமிழர்கள் அனைவரும் இணைந்து கொண்டாடும் வகையில் இந்த விழா கன்னியாகுமரியில் சிறப்பாக நடைபெறவுள்ளது. நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். அனைத்து துறைகளையும் ஒன்றிணைத்து இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த உள்ளோம்.
முதல்வர் ஸ்டாலின் வருகிற 29-ம் தேதி தூத்துக்குடிக்கு வருகை புரிந்து அங்கு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு மறுநாள் 30-ம் தேதி மதியம் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகிறார். அதனைத்தொடர்ந்து முதல் நிகழ்ச்சியாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் அய்யன் திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் பாறை இணைக்கும் கண்ணாடி கூண்டு இழை பாலத்தினை திறந்து வைக்கிறார். பிறகு திருவள்ளுவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்.
அதனைத்தொடர்ந்து சுற்றுலாத்துறை சார்பில் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக வளாகத்தின் அருகில் அமைந்துள்ள ஒலி மற்றும் ஒளி காட்சிக்கூடத்தை திறந்து வைத்து பார்வையிட உள்ளார்கள். அதன்பின் சுகி சிவத்தின் பட்டிமன்றத்தினை காண உள்ளார். மறுநாள் 31-ம் தேதி காலை முதல்வர் ஸ்டாலின், திருவள்ளுவர் குறித்த புகைப்பட கண்காட்சியை பார்வையிடுகிறார். அதன்பின் திருவள்ளுவர் 25-ம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்னர் திருவள்ளுவர் குறித்த கருத்தரங்கமும், மாலையில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. தொடர்ந்து ஜனவரி 1-ம் தேதி ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெறவுள்ளது.
பொதுப்பணித்துறை சார்பாக விழா பந்தல் மற்றும் மேடை அமைப்பது மற்றும் இருக்கைகள் அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலைத்துறை சார்பில் திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் பாறை இணைக்கும் கண்ணாடி கூண்டு இழை பாலத்தின் தரைத்தளப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் சுற்றுலாத்துறை சார்பாக ஒலி மற்றும் ஒளி காட்சிக்கூடம் அமைக்கப்பட்டு வருகிறது. அனைத்து துறைகளும் இணைந்து அனைத்து பணிகளையும் சிறப்பாக மேற்கொண்டோம் என்றால் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக அமையும்” என்றார்.
ஆய்வுகளில் செயற்பொறியாளர் ஸ்ரீராமன், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு ஆய்வாளர் பாஸ்கர், செய்தித்துறை இயக்குநர் வைத்தியநாதன், சுற்றுலா இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், இணை இயக்குநர் (நினைவகங்கள்) தமிழ்செல்வராஜன், மாவட்ட எஸ்பி சுந்தரவதனம், முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மற்றும் பலர் பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT