Published : 19 Dec 2024 08:38 PM
Last Updated : 19 Dec 2024 08:38 PM
கோவை: சட்ட மேதை அம்பேத்கரை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவமதித்து விட்டதாக கூறி, மத்திய அமைச்சரை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக தலைமை இன்று (டிச.19) அறிவித்தது.
அதன்படி, கோவை மாநகர் மாவட்ட திமுக மற்றும் கோவை வடக்கு மாவட்ட திமுக சார்பில், மேட்டுப்பாளையம் சாலை, வடகோவை அருகேயுள்ள, பாரதிபார்க் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல் முதன்மை பொதுமேலாளர் அலுவலகம் முன்பு இன்று(டிச.19) கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுக மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் தலைமை வகித்தார்.
கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மேயர் ரங்கநாயகி, துணை மேயர் ரா.வெற்றிச்செல்வன் மாவட்ட, மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதேபோல் கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில், போத்தனூர் ரயில்நிலையம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் அங்கு உள்ள அம்பேத்கர் சிலையை சுத்தப்படுத்தி, மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கோஷங்களை எழுப்பினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் திமுக மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT