Published : 19 Dec 2024 04:45 PM
Last Updated : 19 Dec 2024 04:45 PM
சென்னை புறநகர் பகுதிகளான அம்பத்தூர் தொழிலக எஸ்டேட்டை ஒட்டிய அத்திப்பட்டு, அயப்பாக்கம், ஐசிஎப் காலனி, மேல் அயனம்பாக்கம், கீழ் அயனம்பாக்கம் பகுதிகளில் தொழிற்சாலைகளுக்கு இணையாக குடியிருப்புகளும் அதிகளவில் உள்ளன. மேல்அயனம்பாக்கம் மற்றும் அத்திப்பட்டு பகுதிகளில் இயங்கும் பிரபலமான தனியார் பள்ளிகளில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.
முகப்பேர், நொளம்பூர், மதுரவாயல் மற்றும் வானகரம் பகுதிகளில் இந்த பள்ளிகளுக்கு செல்ல மாந்தோப்பு சாலையும், மேல்அயனம்பாக்கத்தில் இருந்து திருவேற்காடு செல்லும் சாலையும் பிரதானமாக உள்ளது. இதேபோல அத்திப்பட்டு, ஐசிஎப் காலனி, அம்பத்தூர் பகுதியில் வசிப்பவர்களுக்கு செட்டிதெரு வழியாக செல்லும் அயப்பாக்கம் சாலையும், செல்லியம்மன் நகர், ராம்பூர்ணம் நகர் விரிவாக்கம், ஜேஆர் கேஸ்டில் டவுன், நியூ சென்னை சிட்டி வழியாக மேல்அயனம்பாக்கம் நோக்கி செல்லும் குறுகலான சிமெண்ட் கால்வாய் சாலையும் பிரதானமாக இருந்து வருகிறது. பள்ளி வேளைகளில் இந்த வழித்தடத்தில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
தொடர் கனமழை பெய்தால் ராம்பூர்ணம் நகர் சிமெண்ட் சாலையும், செட்டி தெரு - அயப்பாக்கம் ஐசிஎப் காலனி சாலையும் முழுமையாக துண்டிக்கப்பட்டு விடுகிறது. இதனால் இப்பகுதிகளில் வசிப்பவர்கள் அரை கிமீ தூரத்தில் உள்ள பள்ளிகளுக்கு அத்திப்பட்டு, அம்பத்தூர் வானகரம் சாலையில் சுமார் 4 கிமீ தூரம் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டியுள்ளது. பல பெற்றோர் மாற்றுப்பாதையில் சுற்றிக்கொண்டு செல்ல மனமின்றி, ஆபத்தை உணராமல் குழந்தைகளுடன் ஐசிஎப் - செட்டிதெரு சாலையில் தண்ணீரை கடக்க முற்படும்போது விபத்தில் சிக்கி வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்ததாவது:ராதாகிருஷ்ணன், ஜேஆர் கேஸ்டில் டவுன்: ஏற்கெனவே தனியார் பள்ளிகளுக்கு வந்து செல்லும் வாகனங்களால் இப்பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு அளவே இல்லை. அதுவே மழை பெய்துவிட்டால் வாகன ஓட்டிகள் திக்குமுக்காட வேண்டியுள்ளது. மேல்அயனம்பாக்கம் பிரதான சாலை, வானகரம் - மாந்தோப்பு சாலை, டிடி மேத்யூ, முகப்பேர் மேற்கு சப்-வே என திரும்பும் திசையெங்கும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும்.
இந்த சூழலில் ராம்பூர்ணம் நகர் சிமெண்ட் சாலையும், அயப்பாக்கம் சாலையும் அவ்வப்போது வெள்ளநீரால் சூழ்ந்து சாலை எது, பள்ளம் எது என தெரியாத அளவுக்கு மூழ்கி விடுவதால் இப்பகுதி மக்கள் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு வீட்டடி மனைகளாக மாறியிருப்பதும் இப்பிரச்னைக்கு ஒரு முக்கிய காரணம்.
ஷீலா, ராம்பூர்ணம் நகர்: இப்பகுதியில் உள்ள சிமெண்ட் சாலை மேல அயனம்பாக்கத்தையும், ஐசிஎப் காலனி செல்லியம்மன் நகரையும் இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. இந்த பாதை மழைக்காலங்களில் முழுமையாக துண்டிக்கப்பட்டு விடுகிறது. ஆவடி, திருவேற்காடு, கோலடி, பருத்திப்பட்டு, அம்பத்தூர், அயப்பாக்கம் என எங்கு மழை பெய்தாலும் மொத்த வெள்ள நீரும் இறுதியாக அயப்பாக்கம் செட்டிதெரு, அத்திப்பட்டு ராம்பூர்ணம் நகரின் விரிவாக்க பகுதிகளைத்தான் சூழ்ந்து விடுகிறது.
அயப்பாக்கம் ஐசிஎப் காலனி, அத்திப்பட்டு ராம்பூர்ணம் நகர் பகுதிகள் சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அம்பத்தூர் மண்டலத்துக்குள் வருகிறது. ஆனால் அதிகாரிகள் தேங்கும் தண்ணீரை அப்புறப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இந்த இரு சாலைகளையும் மீட்க மாநகராட்சி நிர்வாகம் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே இப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT