Published : 19 Dec 2024 04:34 PM
Last Updated : 19 Dec 2024 04:34 PM

அமித் ஷா பதவி விலகக் கோரி தமிழகத்தின் பல இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அமைச்சர் அமித் ஷாவை அமைச்சரவையில் இருந்து நீக்க கோரி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் நா.தங்கரத்தினம்

சென்னை: “அம்பேத்கர் மக்களின் கண்களைத் திறந்தார். ஜனநாயகத்தின் ஆணிவேராக இருந்தார். பாஜகவினர் மதத்தின் பெயரால் இந்தியாவில் அரசியல் செய்யலாம் என்று நினைக்கின்றனர். மதத்துக்கு எதிராக அம்பேத்கரின் கருத்துகள் அமைந்திருக்கிறது என்ற காரணத்தால், அவரை அழிக்க பாஜக எண்ணுகிறது,” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறி, திமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று (டிச.19) கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னையில் வள்ளுவர் கோட்டம், சிந்தாதிரிப்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அம்பேத்கரின் உருவப்படத்தை கையில் ஏந்தியபடி திமுகவினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும், என்பது உள்ளிட்ட முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, “குட்டியைவிட்டு ஆழம் பார்க்கிற கதை இது. முதலில் அமித்ஷா-வை விட்டு பேச வைத்து, அதற்கான எதிர்வினை எப்படி இருக்கிறது என்பதை பார்த்துவிட்டு பிரதமர் பேசுவார். பாஜகவின் மூலதனமாக இருப்பவர்கள் அமித்ஷாவும் மோடியும் தான். பிரதமர் மோடியின் கருத்தைத் தான் அமித்ஷா கூறியிருக்கிறார். இந்த சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்தில், திமுக தலைவரும், தமிழக முதல்வருவமான மு.க.ஸ்டாலின் ஆர்த்தெழுந்துவிட்டார்.

தமிழகத்தில் இருந்து ஒரு போராட்டம் தொடங்கினால், அது நிச்சயமாக வெற்றிபெறும். அதற்கு சுதந்திரப் போராட்டக் காலத்தில் இருந்து பல உதாரணங்கள் உண்டு. எனவே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மன்னிப்புக் கேட்க வேண்டும். ஜனநாயகத்தில் பிரதமர் மோடிக்கு நம்பிக்கை இருந்தால், குறைந்தபட்சம் 6 மாதங்களாவது அமித்ஷாவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும். அதுதான் தார்மீக ரீதியாக அவர் மக்களை மதிப்பதற்கான அடையாளம்.

ராகுல் காந்தியின் பாரம்பரியம் என்ன? மோடி-அமித்ஷாவின் பாரம்பரியம் என்ன என்பது இந்த ஊர், உலகத்துக்கே தெரியும். ராகுல் காந்தியின் குடும்பம் செய்த தியாகத்தால்தான், அந்த நாடாளுமன்றமே அங்கே இருக்கிறது. இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த அந்த குடும்பத்தால்தான், மோடியும் அமித் ஷாவும் அந்த நாடாளுமன்றத்தினுள் சென்று, அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், இன்றைக்கு ராகுல் காந்தியையே, நாடாளுமன்றத்துக்குள் விடமாட்டேன் என்கிறார்கள்.

அம்பேத்கர் மக்களின் கண்களைத் திறந்தார். ஜனநாயகத்தின் ஆணிவேராக இருந்தார். பாஜகவினர் மதத்தின் பெயரால் இந்தியாவில் அரசியல் செய்யலாம் என்று நினைக்கின்றனர். மதத்துக்கு எதிராக அம்பேத்கரின் கருத்துகள் அமைந்திருக்கிறது என்ற காரணத்தால், அவரை அழிக்க பாஜகவினர் எண்ணுகின்றனர்,” என்று அவர் கூறினார்.

இதேபோல், மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, புதுக்கோட்டை, கரூர், நாகப்பட்டினம், கடலூர், திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மத்திய அமைச்சர் அமித்ஷாவைக் கண்டித்து திமுக-வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x