Published : 19 Dec 2024 03:25 PM
Last Updated : 19 Dec 2024 03:25 PM
சென்னை:“அம்பேத்கர் மதிப்பைக் குறைக்கும் வகையில் இருப்பதால் அதுபோன்ற பேச்சை உள்துறை அமைச்சர் அமித் ஷா தவிர்த்திருக்க வேண்டும்” என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (டிச.19) செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “அம்பேத்கர் வாழ்க்கை மிக அர்ப்பணிப்புடனும் அறிவுத்திறனுடனும் இருந்தது. அவரை யாருடனும் ஒப்பிட முடியாது. அவர் வாழ்ந்த காலத்தில் இருந்து இன்று வரையிலும் அவரைப் போல யாரும் இல்லை. நாடாளுமன்ற விவாதத்தின் போது உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது எந்த தொணியில் எந்த நோக்கத்தில் சொல்லப்பட்டது என்று தெரியவில்லை. இருந்தாலும் அம்பேத்கர் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் என கருதினாரா? என்று தெரியவில்லை.
இருந்தாலும் அதுபோன்ற வார்த்தையை அவர் பயன்படுத்திருக்கக் கூடாது. அதை தவிர்த்து இருக்க வேண்டும். வெளிப்படையாக பார்க்கும் போது அம்பேத்கர் மதிப்பை குறைப்பது போலத்தான் அவரது பேச்சு இருக்கிறது. இன்று நாம் அனைவருக்கும் பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை இருக்கிறது என்றால் அதற்கு அம்பேத்கர் தான் காரணம். அதனால் அவரை யாருடன் ஒப்பிட முடியாது. அதுபோல அம்பேத்கரை தனது சுயநலத்துக்காக தங்களை முன்னிலைப்படுத்துவதற்காக யாரும் பயன்படுத்த கூடாது.
அதுபோல பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது. அம்பேத்கர் பெயரை மட்டும் சொன்னால் போதாது. உண்மையிலேயே கஷ்டப்படும் மக்களுக்காக அனைவரும் போராட முன் வர வேண்டும். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்காக அரசியல் கட்சியினர் பலரும் போராட முன்வரவில்லை. நாங்கள் மாஞ்சோலை தேயிலை தோட்டம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்திடம் ஆவணங்களை அளித்தோம். அதன் அடிப்படையில் ஆணையம் உண்மை கண்டறியும் குழுவையும் நீதிபதி தலைமையிலான குழுவையும் அமைத்து ஆய்வு செய்து ஆறு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு தெரிவித்துள்ளது.
இதனை தமிழக அரசு உடனடியாக செய்து முடிக்க வேண்டும். மாஞ்சோலை தொழிலாளர்கள் பல தலைமுறைகளாக அங்கு வசித்து வருவதால் வன உரிமை சட்டத்தின் படி அவர்கள் அங்கே வாழ்வதற்கு உரிமை உள்ளது. எனவே அங்குள்ள மக்களின் வாழ் வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும். அதைவிடுத்து அவர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றும் போக்கை தமிழக அரசு கைவிட வேண்டும்,” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT