Published : 19 Dec 2024 02:23 PM
Last Updated : 19 Dec 2024 02:23 PM
சென்னை: மத்திய அரசின் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் வழங்கப்படும் ஓய்வூதியத்தை ரூ.9 ஆயிரமாக உயர்த்தி வழங்கக்கோரி ஓய்வூதியர்கள் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தனியார் தொழிற்சாலை, பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு, வருங்கால வைப்புநிதி திட்டத்தில் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் உயர்த்தி வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து இபிஎப் பென்சனர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் காத்திருப்பு போராட்டம் சென்னை ராயப்பேட்டை இபிஎப் அலுவலகம் முன்பு இன்று நடைபெற்றது. இதில் சென்னை இபிஎப் பென்சன் சங்கம், அகில இந்திய இபிஎப் பென்சன் அசோசியேசன், தமிழ்நாடு பென்சன் அசோசியேசன் ஆகிய 3 அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சென்னை இபிஎப் பென்சன் சங்கத்தின் செயலாளரும், தமிழ்நாடு அனைத்து இபிஎப் பென்சனர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளருமான கே.பி.பாபு தலைமை வகித்தார். தமிழ்நாடு பென்சன் அசோசியேசன் தலைவர் கே.வேணுகோபால், அகில இந்திய இபிஎப் பென்சன் அசோசியேசன் பொதுச் செயலாளர் ஏ.கே.சந்தானகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
போராட்டம் குறித்து ஒருங்கிணைப்பாளர் கே.பி.பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் இந்தியா முழுவதும் 80 லட்சம் பேர் பயனாளர்களாக உள்ளனர். இதில் 36 லட்சம் பேர் ரூ.1000-க்கும் குறைவான ஓய்வூதியம் மட்டுமே பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக போனால் ரூ.4 ஆயிரத்துக்கு மேல் ஓய்வூதியம் பெறுபவர்கள் யாரும் கிடையாது.
ஆனால் பழைய ஓய்வூதிய திட்டத்தின் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு வாங்கும் சம்பளத்தில் பாதி சம்பளம் அவர்களுக்கு ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் விலைவாசி உயர்வுக்கு ஏற்ற வாராக எங்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்க வேண்டும்.
இதையொட்டி கடந்த 10 ஆண்டுகாலமாக குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்கக்கோரி தொடர்ந்து போராடி வருகிறோம். கிட்டத்தட்ட நாடாளுமன்றத்தில் 60 எம்பிக்கள் இது குறித்து வலியுறுத்தி உள்ளனர். இருந்த போதும் இதுவரை எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை.
அதேபோல திட்டத்தில் உள்ள சரத்தின் அடிப்படையில் கூடுதலாக பணம் கட்டினால் கூடுதலாக உயர் ஓய்வூதியம் பெற்றுக் கொள்ளலாம். அதன்படி செலுத்தப்படும் ரூ.6,500 சீலிங் கட்டணத்தை தாண்டி கூடுதலாக பணம் கட்டினால் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று சட்டத்தில் இடம் இருக்கிறது. இதையொட்டி திட்டத்திற்கு இந்தியா முழுவதும் 13 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் தற்போது வரை 16 ஆயிரம் பேருக்கு மட்டுமே உயர் ஓய்வூதியம் வழங்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இதற்கு விண்ணப்பித்திருந்தனர். அதில் 1200 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ளவர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தடுத்தோம். அதன்படி 2014 பிறகு பணி ஓய்வு பெற்றவர்கள் கூடுதலாக பணம் கட்டினால் அவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருந்தாலும் இபிஎப் நிறுவனம் தொடர்ந்து அவற்றை வழங்காமல் எங்களை அலைக்களித்துக் கொண்டிருக்கிறது.
இதையொட்டி வருங்கால பைப்பு நிதி நிறுவனத்தின் மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையரை சந்தித்து எங்கள் கோரிக்கையில் நிறைவேற்ற மனு அளிக்க உள்ளோம். இதற்கான பதில் அவரிடம் இருந்து கிடைக்கும் வரை காத்திருப்பு போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT