Published : 19 Dec 2024 01:07 PM
Last Updated : 19 Dec 2024 01:07 PM
சென்னை:அம்பேத்கரை அவமதித்த அமித் ஷாவை வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நாட்டின் விடுதலை போராட்டத்திலும் சமூக விடுதலைப் போராட்டத்திலும் தீவிரமாக ஈடுபட்ட சட்ட மேதை அம்பேத்கர் பெயரை உச்சரிப்பதால் எந்த பயனும் கிடைக்காது என்று ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்ற மாநிலங்களவையில் வன்மத்தை வெளிப்படுத்தியுள்ளார். அண்ணலை இழிவு படுத்தி ஆணவத்துடன் பேசிய அமித் ஷாவின் திமிரான செயலுக்கு நாடு கிளர்ந்தெழுந்து கண்டனம் தெரிவித்து வருகிறது.
சில வருடங்களுக்கு முன்பு பி.ஆர்.அம்பேத்கரின் 125 -வது பிறந்த தினத்தை சங் பரிவார் கும்பலும், பாஜக ஒன்றிய அரசும் கொண்டாடி, முழங்கியது அரசியல் பித்தலாட்டம் என்பது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. சாதிய அமைப்பையும், மதவெறிச் செயலையும் வளர்த்து, வெறுப்பு அரசியலை முன்னெடுப்பதை அது ஒருபோதும் கைவிடாது என்பதை அமித் ஷாவின் சனாதன வெறி பிடித்த பேச்சு காட்டுகிறது.
விடுதலை பெற்ற நாட்டை, இறையாண்மை கொண்ட சுதந்திர நாடாக நிர்மாணிக்க அரசியலமைப்பு சட்டத்தை வரைவு செய்து வழங்கிய அம்பேத்கரின் மேதைமையும் , சட்ட வல்லுநர்களும், தியாக சீலர்களும் நிறைந்திருந்த அரசியலமைப்பு நிர்ணய சபையில் அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும், சொற்றொடருக்கும் அனைவரும் ஏற்கத்தக்க விளக்கங்களை அளித்து, ஒரு மனதாக ஏற்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கி வழங்கிய ஈடு, இணையற்ற பேரறிவாளருமான அம்பேத்கரை இழிவு படுத்திய அமித் ஷா உள்துறை அமைச்சர் பொறுப்பில் ஒரு வினாடியும் நீடிக்க தகுதியற்றவர்.
அவரை அமைச்சரவையில் இருந்து வெளியேற்ற வலியுறுத்தி இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட, மாநகர, நகர, பேரூர் மற்றும் ஒன்றியத் தலைநகர்களில் நாளை (20.12.2024 - வெள்ளிக்கிழமை) ஆர்பாட்டத்தில் ஈடுபடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். கட்சியின் மாவட்டக் குழுக்களும், இடைக் குழுக்களும் சமூக நீதி ஜனநாயகம் காக்க நடைபெறும் ஆர்ப்பாட்ட இயக்கத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...