Published : 19 Dec 2024 06:04 AM
Last Updated : 19 Dec 2024 06:04 AM
சென்னை: மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் உணவுத் திருவிழா நாளை (டிச.20) தொடங்கி 24-ம் தேதி வரை சென்னை, மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது. இதை துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைக்கிறார்.
உணவுத் திருவிழாவில், கோவை கொங்கு மட்டன் பிரியாணி, கிருஷ்ணகிரி நோ ஆயில் நோ பாயில் உணவு வகைகள், கரூர் தோல் ரொட்டி - மட்டன் கிரேவி, தருமபுரி ரவா கஜூர், நீலகிரி ராகி களி - அவரை குழம்பு, திருப்பூர் முட்டை ஊத்தப்பம், காஞ்சிபுரம் கோவில் இட்லி, தஞ்சாவூர் பருப்பு உருண்டை குழம்பு, மயிலாடுதுறை இறால் வடை, கன்னியாகுமரி பழம் பொறி, சென்னை தயிர் பூரி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் விற்பனை செய்யப்படவுள்ளன.
அரியலூர் வறுத்த முந்திரி, செங்கல்பட்டு நாட்டுச் சர்க்கரை எள்ளுருண்டை, சென்னை வேர்க்கடலை நெய் லட்டு, கருப்புக் கவுனி அரிசி லட்டு உள்ளிட்ட 67 வகையான தயார் நிலை உணவுப் பொருட்களும் விற்பனைக்கு இடம்பெறுகின்றன. மேலும் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட 45 வகையான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படும். இவ்வாறாக 40-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
தொடக்க நாளில் மாலை 4 முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும் உணவுத் திருவிழா, மற்ற நாட்களில் பிற்பகல் 12.30 முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். லேடி வெலிங்டன் கல்லூரி, சென்னைப் பல்கலைக் கழகம் மற்றும் ராணி மேரி கல்லூரி ஆகிய கல்லூரிகளின் வளாகங்களில் இலவசமாக வாகனங்களை நிறுத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனத் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT