Published : 19 Dec 2024 02:56 AM
Last Updated : 19 Dec 2024 02:56 AM
தமிழகத்தில் கொட்டப்படும் மருத்துவக் கழிவை அகற்றும் செலவை கேரள மாசுக்கட்டுப்பாடு வாரியத்திடம் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் வசூலிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் உற்பத்தியாகும் மருத்துவக் கழிவுகள், அம்மாநில எல்லையை ஒட்டி திருநெல்வேலி, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழக பகுதிகளில் கொட்டப்படுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டம் கோடகநல்லூர், நடுக்கல்லூர் பகுதிகளில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டன. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில், அமர்வின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில், கேரள மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர் சண்முகநாதன், தமிழக பகுதியில் கேரள அரசு மருத்துவக் கழிவுகள் கொட்டுவதை சுட்டிக்காட்டினார்.
அப்போது, "கேரள மருத்துவக் கழிவுகளை முறைப்படி அகற்றுவதற்கு தேவையான வசதிகளை மேற்கொள்ளாமல் ஏன் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்" என்று கேரள அரசுக்கு கேள்வி எழுப்பினர். தொடர்ந்து "கேரளாவில் இருந்து கொட்டப்படும் மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்கு ஆகும் செலவை கேரள மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் இருந்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் வசூலிக்க வேண்டும்" என உத்தரவிட்டனர்.
மேலும், "கேரளாவில் மருத்துவக்கழிவுகளை அகற்றுவதற்கு என்னென்ன நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது? அங்குள்ள மருத்துவ கழிவுகளை தமிழகத்தில் கொட்ட வேண்டிய அவசியம் என்ன? என்பது குறித்து கேரள மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர். தொடர்ந்து , வழக்கின் அடுத்த விசாரணையை வரும் ஜன.10-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT