Published : 19 Dec 2024 01:12 AM
Last Updated : 19 Dec 2024 01:12 AM
நாடாளுமன்றத்தில் அதானி பற்றியும் மணிப்பூர் கலவரம் குறித்தும் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்திய கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட காங்கிரசார் கைதாகி பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
அமெரிக்க நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்ட தொழிலதிபர் அதானி குறித்தும், மணிப்பூர் கலவரம் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னை சைதாப்பேட்டையில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக அவர் பேசியதாவது:
நாட்டுக்கு ஆபத்து வரும் போதெல்லாம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை எதிர்கட்சித் தலைவருமான ராகுல்காந்தி குரல் கொடுத்து வருகிறார். அந்த அடிப்படையில் அமெரிக்க நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்டுள்ள அதானியின் செயல்பாடுகள் குறித்தும், மணிப்பூரில் நீடித்து வரும் கலவரம் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று ராகுல்காந்தி கோரினார். ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உத்தரவிட்டது.
அதன்படி, இங்கு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயர்களால் நம் நாட்டின் வளங்கள் சூறையாடப்பட்டன. இப்போது தொழிலதிபர் அதானியால் நாட்டின் வளங்கள் சூறையாடப்படுகின்றன. அவர் மீது விசாரணையோ, எந்த நடவடிக்கையோ மத்திய அரசு எடுக்கவில்லை. அதானி ஊழல்கள் குறித்து அமெரிக்க நாடு ஆதாரத்தைக் கொடுத்த பிறகும் அதானி மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. இதனால் உலக நாடுகள் இந்தியாவைப் பற்றி கேவலமாகப் பேசி வருகின்றன. இதெல்லாம் கண்டித்துத்தான் ஆளுநர் மாளிகையை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்துகிறோம். இவ்வாறு அவர் தெரவித்தார்.
இதையடுத்து மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி, முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார், எம்எல்ஏ. துரை சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஆளுநர் மாளிகை நோக்கி செல்ல முயன்றதால் செல்வபெருந்தகை உள்பட 430 பேர் கைது செய்யப்பட்டனர். சற்று நேரத்தில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT