Published : 19 Dec 2024 12:37 AM
Last Updated : 19 Dec 2024 12:37 AM

8-வது நாளாக கடலுக்கு செல்லாத மீனவர்கள்: ரூ.16 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு

நாகப்பட்டினம்: வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை​யால் நாகை மாவட்ட விசைப்​படகு மீனவர்கள் நேற்று 8-வது நாளாக மீன்​பிடிக்க கடலுக்​குச் செல்​ல​வில்லை. இதனால் ரூ.16 கோடி அளவுக்கு வர்த்​தகம் பாதிக்​கப்​பட்​டுள்ளதாக மீனவர்கள் தெரி​வித்​தனர்.

வங்கக் கடலில் உருவாகி​யுள்ள குறைந்த காற்​றழுத்த தாழ்வு நிலை மற்றும் கடல் சீற்றம் காரணமாக வட தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதி​யில் காற்றின் வேகம் அதிகரிக்​க​வும், கடலில் அதிக மழை பெய்​ய​வும் வாய்ப்புள்ள​தால் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை விசைப்​படகு​களில் கடலுக்​குச் செல்ல வேண்​டாம் என்று மீன்​வளத் துறை​யினர் கடந்த 11-ம் தேதி தடை விதித்​தனர்.

இதன் காரண​மாக, நாகை மாவட்​டத்​தில் அக்கரைப்​பேட்டை, கீச்​சாங்​குப்​பம், நம்பி​யார் நகர், கல்லார், சாமந்​தான்​பேட்டை, செருதூர், கோடியக்​கரை, ஆறுகாட்டுத்​துறை, வேதா​ரண்யம் உள்ளிட்ட 25 மீனவக் கிராமங்​களைச் சேர்ந்த விசைப்​படகு மீனவர்கள் நேற்று 8-வது நாளாக மீன்​பிடிக்க கடலுக்​குச் செல்​ல​வில்லை.

ஏற்கெனவே ஃபெஞ்சல் புயல் காரணமாக 14 நாட்கள் கடலுக்​குச் செல்​லாமல் இருந்த மீனவர்​கள், கடந்த 2-ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்​றனர். 9 நாட்​களாக கடலுக்கு சென்று வந்த நிலை​யில் மீண்​டும் மீன்​வளத் துறை​யினர் கடலுக்கு செல்ல தடை விதித்​துள்ள​தால், மீனவர்கள் மிகக் கடுமையாக பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். மேலும், மீன்​பிடித் தொழிலைச் சார்ந்த ஒரு லட்சத்​துக்​கும் மேற்​பட்​டோர் வருமானமின்றி வாழ்​வா​தாரம் பாதிக்​கப்​பட்​டுள்ளதாக கவலை தெரி​வித்​துள்ளனர்.
நாகை மீன்​பிடித் துறை​முகத்​தில் தினமும் ரூ.2 கோடிக்கு வர்த்​தகம் நடைபெறும் நிலை​யில், 8 நாட்​களாக ரூ.16 கோடி வர்த்​தகம் பாதித்​துள்ளதாக மீனவர்கள் தெரி​வித்​துள்ளனர். மீன்​வரத்து இல்லாத ​காரணத்​தால் வெளி​மாநில ​வி​யாபாரி​களால் ​கொண்டு​வரப்​படும் மீன்​களின் ​விலை​யும் அதிகரித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x