Published : 18 Dec 2024 10:39 PM
Last Updated : 18 Dec 2024 10:39 PM
கோவை: “காந்தி, நேதாஜிக்கு பிறகு மிகப்பெரிதாக மதிக்கக்கூடிய தலைவராக அம்பேத்கர் உள்ளார். அவரது புகழ் என்றைக்கும் நிலைத்திருக்கும்” என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் புதன்கிழமை மாலை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “நமது பாரத தேசத்தில் காந்தி, நேதாஜிக்கு பிறகு மிகப்பெரிதாக மதிக்கக்கூடிய தலைவராக அம்பேத்கர் உள்ளார். அவரது புகழ் என்றைக்கும் நிலைத்திருக்கும். அவர் தந்த அரசியலமைப்பு சட்டத்தால் தான், இந்திரா காந்தியால் கூட ஜனநாயகத்தை அசைத்து பார்க்க முடியவில்லை.
அந்த மகத்தான மனிதரின் புகழுக்கு ஒருபோதும் கலங்கத்தை ஏற்படுத்தக் கூடாது. ஒரே நாடு ஒரே தேர்தலால் மாநிலங்களின் உரிமை ஒருபோதும் பறிபோகது. மத்திய அரசை எதிர்க்க வேண்டும் என்பதற்காக சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்கின்றனர். அடிக்கடி தேர்தல் என்பது சமுதாயம் மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கு கேடு விளைவிக்கும். அதனால் தேர்தல் என்பது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவது தான் முன்னேற்றத்திற்கான வழியாக இருக்கும்.
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதான பாஷாவின் இறுதி ஊர்வலத்தில் இரண்டு அரசியல் தலைவர்கள் (சீமான், தனியரசு)பெரிய தியாகிக்கு மரியாதை தருவது போல கலந்து கொண்டிருக்கின்றனர். அந்த இரண்டு தலைவர்களையும் தமிழ் மக்கள் முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும்.
கருப்பு தின பேரணி நடத்துபவர்களை பாராட்டுகிறேன். அனைத்து இடங்களிலும் போதை பழக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கு எதிராக மாநில அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் போது, ஆதரவு கரம் நீட்ட வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT