Published : 18 Dec 2024 10:13 PM
Last Updated : 18 Dec 2024 10:13 PM
கோவை: நீங்கள் என்னை முஸ்லிம் என நினைத்தால் நான் முஸ்லிம். நீங்கள் என்னை இந்து என நினைத்தால் நான் இந்து. நான் எல்லாருக்கும் பொதுவானவன். எப்பொழுதும் அப்படித்தான் இருப்போம். எல்லா மதங்களும் அடிப்படையில் அன்பைத் தான் போதிக்கிறது என கோவையில் நடந்த விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
எஸ்பிசி பெந்தெகொஸ்தே சபைகளின் சார்பில், கிறிஸ்து பிறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, சத்தி சாலை, ஆம்னி பேருந்து நிலையம் எதிரேயுள்ள, பெத்தேல் மாநகரப் பேராலயத்தில் புதன்கிழமை (டிச.18) மாலை நடந்தது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது: “ஒட்டுமொத்த உலகையே மகிழ்விக்கும் விழா என்றால் அது நம்முடைய கிறிஸ்துமஸ் விழா மட்டுமே. அதுவும் கிறிஸ்துமஸ் என்றால் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. நான் படித்தது டான் போஸ்கோ பள்ளியில், அதன் பிறகு மேற்படிப்பு படித்தது லயோலா கல்லூரியில். சென்ற ஆண்டு ஒரு கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது ‘நானும் ஒரு கிறிஸ்தவன் என்பதை பெருமையாக சொல்கிறேன்’ என்று கூறியிருந்தேன். அது உடனே பல பேருக்கு வயிற்றெரிச்சலை கொடுத்தது.
இன்று மீண்டும் உங்கள் முன்னால் சொல்கிறேன். அதை சொல்வதில் நான் மிகவும் பெருமையும் கொள்கிறேன். நான் ஒரு கிறிஸ்தவன் தான். நீங்கள் என்னை முஸ்லிம் என நினைத்தால் நான் முஸ்லிம். நீங்கள் என்னை இந்து என நினைத்தால் நான் இந்து. நான் எல்லாருக்கும் பொதுவானவன். எப்பொழுதும் அப்படித்தான் இருப்போம். எல்லா மதங்களும் அடிப்படையில் அன்பைத் தான் போதிக்கிறது. எல்லோர் மீதும் அன்பு செலுத்த வேண்டும் என எல்லா மதங்களும் சொல்லித் தருகிறது. ஆனால், அதே மதத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடுபவர்கள் தான் மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்துவார்கள், பரப்புவார்கள்.
வெறுப்பை பரப்புபவர்கள் எப்பொழுதும் உண்மையை பேச மாட்டார்கள். உண்மைகளை பேசி வெறுப்பை பரப்ப முடியாது. அதனால் தான் அவர்கள் தொடர்ந்து பொய்யை நம்பி, பொய்யை மட்டும் பரப்புகின்றனர். அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் சமீபத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு கருத்துகளை பேசினர். அவரை நீக்க நாம் குரல் கொடுத்தோம். பாராளுமன்றத்தில் எம்.பிக்கள் தீர்மானம் கொண்டு வந்தனர். திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் அத்தீர்மானத்தை ஆதரித்தனர். ஆனால், அதிமுக உறுப்பினர்கள் அத்தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. அரசியலமைப்புக்கு எதிரான கருத்துகளை பேசிய நீதிபதியை பதவியை விட்டு நீக்கும் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் துணிச்சல் கூட அதிமுகவுக்கு இல்லை.
மாநிலத்தின் உரிமைகளை ஒழித்துக் கட்ட, மத்திய அரசு கொண்ட வந்த ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கும் அதிமுக ஆதரவு கொடுத்துள்ளது. வெளிவேஷசத்துக்காக தான் நாங்கள் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுகவினர் தெரிவிக்கின்றனர். உள்ளுக்குள் உண்மையாகவே அதிமுக - பாஜக கள்ளக்கூட்டணி (மறைமுகக்கூட்டணி) தொடர்கிறது. இப்படிப்பட்ட அதிமுகவை சில சிறுபான்மை அமைப்புகள் நம்புவது எனக்கு கவலை அளிக்கின்றன. தமிழ் மண்ணில், திமுக இருக்கும் வரை சிறுபான்மை மக்களுக்காக என்றைக்கும் பாதுகாப்பாக இருப்போம். நீங்கள் என்றைக்கும் எங்களுக்கு ஆதரவாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வேம் என முதல்வர் கூறியுள்ளார். உங்களுக்கு அரணாக இருக்கும் திமுகவுக்கு நீங்கள் ஆதரவாக இருக்க வேண்டும்” இவ்வாறு உதயநிதி பேசினார்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, கோவி.செழியன், மேயர் ரங்கநாயகி, துணை மேயர் வெற்றிச்செல்வன், திமுக மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொ.அ.ரவி, தளபதி முருகேசன் மற்றும் பெந்தெகொஸ்தே சபைகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT