Last Updated : 06 Jul, 2018 07:05 PM

 

Published : 06 Jul 2018 07:05 PM
Last Updated : 06 Jul 2018 07:05 PM

பணம் சம்பாதிப்பதை மட்டும் குறிக்கோளாகக் கொள்ளாதீர்: அரசியல்வாதிகளுக்கு வெங்கய்ய நாயுடு அறிவுரை

மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் தொடர்ந்து கற்க வேண்டும். பணம் சம்பாதிப்பதை மட்டும் குறிக்கோளாகக் கொள்ளக்கூடாது. இது அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

குடியரசு துணைத் தலைவரும் புதுச்சேரி பல்கலைக்கழக வேந்தருமான வெங்கய்ய நாயுடு இன்று புதுச்சேரி பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அவருக்கு துணைவேந்தரான குர்மீத் சிங் வரவேற்பு அளித்தார். இந்நிகழ்வில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் முன்பு வெங்கய்ய நாயுடு பேசியபோது, ''அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியா உலக அளவில் பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்திலுள்ள நாடாக மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவரவர் தாய்மொழியில் கல்வியைக் கற்க வேண்டும். கல்வி என்பது வேலைக்காக மட்டுமல்ல. ஒவ்வொருவரும் தங்கள் கனவையும் குறிக்கோளையும் பெரியதாக எண்ணுங்கள். படிப்பதை சிரமமாகக் கொள்ளாமல் மகிழ்வுடன் படியுங்கள். கல்வி கற்பிற்கும் முறை எளிதாக இருக்க வேண்டும். அப்போது தான் மாணவர்கள் விரும்பிப் படிப்பார்கள்.

வாழ்க்கை முழுவதும் கற்றுக்கொண்டே இருங்கள். சம்பாதிக்கவேண்டும் என்று ஓடிக்கொண்டு இருக்காதீர்கள். பல வெளிநாட்டு உணவுகள் நமது நாட்டிற்கு வந்தாலும் நமது நாட்டில் தயாரிக்கப்படும் இட்லி, தோசைக்கு உலக அளவில் வரவேற்பு உள்ளது. இந்திய உணவை நமது முன்னோர் சோதித்துவிட்டனர். பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவு உடலுக்கு நல்லதல்ல.

இளைஞர்கள் கல்வியில் ஆர்வம் மிக்கவர்களாக இருக்க வேண்டும். மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் தொடர்ந்து கற்க வேண்டும். பணம் சம்பாதிப்பது மட்டும் குறிக்கோளாக கொள்ளக்கூடாது. இது அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்.

நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வருவதால் மட்டுமே ஒரு குற்றத்தைத் தடுத்துவிட முடியாது. காவல் நிலையங்கள் இருந்தும் குற்றங்கள் நடக்கத்தான் செய்கிறது. ஆகவே, மாற்றம் மக்களிடம் வர வேண்டும்'' என்று வெங்கய்ய நாயுடு குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x