Published : 18 Dec 2024 07:14 PM
Last Updated : 18 Dec 2024 07:14 PM

கேரம் உலக சாம்பியன்: தமிழக வீராங்கனை காசிமாவுக்கு ரூ.1 கோடி பரிசு

சென்னை: அமெரிக்காவில் நடைபெற்ற 6-வது உலக கேரம் போட்டிகளில் தங்கப்பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கு சிறப்பு சேர்த்த எம்.காசிமா, வி.மித்ரா, கே.நாகஜோதி ஆகியோருக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக மொத்தம் ரூ.2 கோடிக்கான காசோலைகளை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இது தொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை: சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மெகபூப் பாஷா என்பவரின் மகள் எம்.காசிமா. இவர் தேனாம்பேட்டை மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகின்றார். தனது தந்தையின் வருமானத்தில் கேரம் விளையாட்டில் ஆர்வத்துடன் மாநில மற்றும் இந்திய அளவில் பல்வேறு போட்டிகளில் வென்று சாதனை படைத்துள்ள இவர் கடந்த 2024 நவம்பர் மாதம் 11 முதல் 17 வரை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்ற 6வது உலக கேரம் போட்டியில் கலந்து கொள்ள நிதியுதவி கோரி தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளையில் விண்ணப்பித்து இருந்தார். இவருடன் மேலும் 2 வீராங்கனைகள் ஒரு பயிற்சியாளருடன் அமெரிக்கா செல்ல நிதியுதவி கோரி விண்ணப்பித்து இருந்தார்கள்.

இந்த போட்டியில் கலந்து கொள்ள 3 வீராங்கனைகள் மற்றும் 1 பயிற்சியாளருக்கு தலா ரூ.1,50,000/- வீதம் மொத்தம் ரூ.6,00,000/- க்கான நிதியுதவியை மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் கீழ் வழங்கியிருந்தார். இந்த நிதியின் மூலம் அமெரிக்காவில் நடைபெற்ற கேரம் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களை தமிழ்நாட்டு வீராங்கனைகள் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்தார்கள்.

அமெரிக்காவில் நடைபெற்ற 6-வது உலக கேரம் போட்டியில் தனிநபர், இரட்டையர் பிரிவு மற்றும் குழு போட்டியில் தலா ஒரு தங்க பதக்கம் வென்ற எம்.காசிமாவுக்கு சிறப்பு ஊக்க தொகையாக ரூ.1.00 கோடியும், இரட்டையர் பிரிவு மற்றும் குழு போட்டியில் தலா ஒரு தங்க பதக்கம் வென்ற வி.மித்ரா அவர்களுக்கு சிறப்பு ஊக்க தொகையாக ரூ.50.00 லட்சமும், குழு போட்டியில் ஒரு தங்கம் மற்றும் இரட்டையர் பிரிவில் ஒரு வெள்ளி பதக்கம் வென்ற கே.நாகஜோதிக்கு சிறப்பு ஊக்க தொகையாக ரூ.50.00 லட்சமும் என சிறப்பு உயரிய ஊக்க தொகையாக மொத்தம் ரூ. 2.00 கோடிக்கான காசோலைகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (18.12.2024) வழங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x