Last Updated : 18 Dec, 2024 05:47 PM

 

Published : 18 Dec 2024 05:47 PM
Last Updated : 18 Dec 2024 05:47 PM

மதுராந்தகம் அருகே கிளியாற்றில் மாயமான மாணவனின் உடல் சடலமாக மீட்பு: பெற்றோர், உறவினர்கள் போராட்டம்

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே கிளியாற்றில் குளித்த 12ம் வகுப்பு மாணவன் நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில், நான்கு நாட்களுக்கு பிறகு உடலை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். இந்நிலையில், நிவாரணம் வழங்ககோரி பெற்றோர் மற்றும் உறவினர்கள் நீர்வளத்துறை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த மலைப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவருடைய மகன் புவனேஷ்(16). மதுராந்தகம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், மதுராந்தகம் ஏரியிலிருந்து உபரி நீர் செல்லக்கூடிய கிளியாற்றில் நண்பர்கள் சிலருடன் புவனேஷ் கடந்த 15ம் தேதி மாலை குளித்ததாக தெரிகிறது.

அப்போது, கிளியாற்று வெள்ளத்தில் புவனேஷ் மட்டும் அடித்து செல்லப்பட்டார். இதையடுத்து, மதுராந்தகம் போலீஸார் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், பேரிடர் மீட்பு குழுவினர் மாணவனை தேடி வந்தனர். இந்நிலையில், நான்காம் நாளான இன்று மாணவனை சடலமாக தீயணைப்புத்துறையினர் மீட்டனர். மேலும், பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக, மதுராந்தகம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே, மதுராந்தகம் ஏரியின் கலங்கள் பகுதியில் பொதுமக்கள் செல்வதை தடுக்கும் வகையில், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாததே மாணவன் உயிரிழப்புக்கு காரணம் எனக்கூறி, பெற்றோர் மற்றும் உறவினர்கள் மதுராந்தகம் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, போலீஸார் மற்றும் வட்டாட்சியர் துரைராஜ் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில், நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர். உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x