Last Updated : 18 Dec, 2024 03:32 PM

 

Published : 18 Dec 2024 03:32 PM
Last Updated : 18 Dec 2024 03:32 PM

‘டெங்கு’ காய்ச்சல் அதிகரிப்பதால் மக்கள் விழிப்புடன் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்

குறியீட்டுப் படம்

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளான நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது என்றும் நோய் பரவலை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு மிக அவசியம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆண்டுதோறும் பருவமழை காலங்களில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகம் காணப்படும். இதை கட்டுப்படுத்த மாவட்ட சுகாதாரத்துறை, மாநகராட்சி நிர்வாகம் சார்பில், தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாண்டில் சமீப நாட்களாக கோவை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்காக சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணி்க்கை அதிகரித்து வருவதாகவும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிகோபார்
குழந்தைகள் மருத்துவர் சங்கத் தலைவர் ராஜேந்திரன்

இது குறித்து தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிகோபார் குழந்தைகள் மருத்துவர் சங்கத் தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது: பருவ மழை காலங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து காணப்படும். வீடு, திறந்தவெளி பகுதிகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல இடங்களில் நீண்ட நாட்கள் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளைக் கண்டறிந்து அவற்றை சுத்தம் செய்ய வேண்டும். தேங்கி நிற்கும் தண்ணீரில் தான் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ‘ஏடீஸ்’ வகை கொசுக்கள் அதிக எண்ணிக்கையில் உற்பத்தியாகும்.

குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைத்து வயதினரையும் டெங்கு காய்ச்சல் பாதிக்க வாய்ப்பு உள்ளது. ‘ஏடீஸ்’ கொசுக்கள் தோற்றத்தில் வித்தியாசமாக இருக்கும். பகல் நேரங்களில் குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் தான் இந்த கொசுக்கள் மனிதர்களை கடிக்கும். எனவே வீடுகளில் ஜன்னல், கதவுகளை மாலை நேரங்களில் மூடி வைக்க வேண்டும். குழந்தைகளுக்கு கை மற்றும் கால்களை முழுவதும் மூடும் வகையிலான உடைகளை அணிவிக்க வேண்டும்.

சமீப நாட்களாக கோவை மாவட்டத்தில் செயல்படும் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளதால் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாவட்ட சுகாதாரத்துறை, மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்த வேண்டும். இந்நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு மிக அவசியம். ஒவ்வொருவரும் தங்களின் வீடுகளின் பின்புறம் உள்ளிட்ட வீட்டின் சுற்றுப்புற பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும். காய்ச்சல் தொடரும் பட்சத்தில் மருத்துவரின் பரிந்துரையின்பேரில் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்படும். இத்தகைய நடவடிக்கைகளால் உரிய நேரத்தில் தேவைப்படும் குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை விரைவாக வழங்க வாய்ப்பு கிடைக்கும். அனைத்து வயதினரும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். குழந்தைகள் நலனில் பெற்றோர் அலட்சியம் காட்ட கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x