Published : 18 Dec 2024 01:56 PM
Last Updated : 18 Dec 2024 01:56 PM
தேனி: தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதை அடுத்து சவுக்கு சங்கரை மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீஸார் அழைத்துச் சென்றனர்.
கஞ்சா வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகமல் இருந்ததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட சவுக்கு சங்கரை சென்னையில் செவ்வாய்க்கிழமை கைது செய்த தேனி போலீஸார், புதன்கிழமையன்று காவல் நிலையத்துக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். காவல் துறை உயரதிகாரிகள் மற்றும் பெண் போலீஸாரை அவதூறாகப் பேசியதாக கடந்த மே 4-ம் தேதியன்று தேனியில் தங்கியிருந்த பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கோயமுத்தூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
அப்போது அவர் தங்கியிருந்த விடுதி அறை மற்றும் காரில் சுமார் 2.5 கிலோ கஞ்சா இருந்ததாக சவுக்கு சங்கர் மற்றும் அவரது உதவியாளர், கார் டிரைவர் என 3 பேர் மீது பழனி செட்டி பட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கிலும் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் பின்னர் நீதிமன்ற ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராகமல் இருந்த சவுக்கு சங்கருக்கு நேற்று மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி செங்கமலச் செல்வன் பிடிவாரண்ட் பிறப்பித்தார்.
அதனைத் தொடர்ந்து சென்னைக்கு விரைந்த தேனி போலீஸார், சவுக்கு சங்கரை கைது செய்து இன்று(புதன்கிழமை) காலை பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவமனை பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர். மருத்துவ பரிசோதனை முடிந்த பின்னர் மீண்டும் பழனி செட்டி பட்டி காவல் நிலையத்துக்கு சவுக்கு சங்கர் அழைத்து வரப்பட்டார். பின்னர் மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சவுக்கு சங்கர் அழைத்துச் செல்லப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT