Published : 18 Dec 2024 01:17 PM
Last Updated : 18 Dec 2024 01:17 PM

‘‘அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தை பற்றிக் கவலைப்பட வேண்டும்’’: அமித் ஷா பேச்சுக்கு ஸ்டாலின் காட்டம்

சென்னை: அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தை பற்றிக் கவலைப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் காட்டமாக எதிர்வினையாற்றி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், “அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் அரசியல்சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள்! சொல்ல வேண்டும்! என குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டைக் குறிக்கும் விவாதத்தின் போது மாநிலங்களவையில் நேற்று உரையாற்றிய அமித் ஷா, "பி.ஆர். அம்பேத்கரின் பெயரை பயன்படுத்துவது இப்போது ஒரு "பேஷன்" ஆகிவிட்டது. எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று பேசுகிறார்கள். கடவுளின் பெயரை இவ்வாறு பலமுறை சொன்னாலாவது அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்.

அம்பேத்கரின் பெயரை 100 மடங்கு அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால், அவரைப் பற்றிய உங்கள் உணர்வு என்ன என்பதை நான் கூற விரும்புகிறேன். ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசாங்கத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து முதல் அமைச்சரவையில் இருந்து பி.ஆர்.அம்பேத்கர் ராஜினாமா செய்ய நேரிட்டது. பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினரை நடத்துவதில் திருப்தி இல்லை என்று அம்பேத்கர் பலமுறை கூறியுள்ளார். அவருக்கு ஒரு உத்தரவாதம் வழங்கப்பட்டது. அந்த உத்தரவாதம் நிறைவேறாததால், அவர் ராஜினாமா செய்தார்" என்று கூறி இருந்தார்.

அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு இண்டியா கூட்டணி சார்பில் கண்டனம் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, திமுக எம்பி டி.ஆர். பாலு உள்பட மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த எதிர்க்கட்சி எம்பிக்கள் கலந்து கொண்டனர். இந்திய அரசியலமைப்புச் சிற்பியை அமித் ஷா அவமதித்துவிட்டதாகவும் தனது பேச்சுக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x