Last Updated : 18 Dec, 2024 02:08 PM

 

Published : 18 Dec 2024 02:08 PM
Last Updated : 18 Dec 2024 02:08 PM

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் கழிவு நீர் கலப்பது தடுக்கப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

மதுரை: புதிய கழிவு நீர் சுத்திக்கரிப்பு நிலையத்தால் ராமேஸ்வரம் அகினி தீர்த்தத்தில் கழிவு நீர் கலப்பது தடுக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த யானை ராஜேந்திரன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. ராமேஸ்வரம் நகராட்சி முழுவதும் இருந்து வெளிவரும் கழிவுநீர் அக்னி தீர்த்தம் அருகே கடலில் கலக்கிறது. பக்தர்கள் புனித நீராக கருதும் அக்னி தீர்த்தம் அருகே கழிவுநீர் கலப்பதால் கடல் நீர் அசுத்தமாகிறது. இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ராமேஸ்வரம் கோயிலில் உள்ள அக்னி தீர்த்தம் அருகே நகராட்சி கழிவுநீர் கடலில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். இதுகுறித்து பதில் அளிக்கவும், நகராட்சி ஆணையர் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், அ. டி மரிய கிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராமேஸ்வரம் நகராட்சி ஆணையர் நேரில் ஆஜரானார். நகராட்சி வழக்கறிஞர் வாதிடுகையில், "ராமேஸ்வரம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வெளியேறும் கழிவுகளை சுத்திகரிப்பதற்காக ஓலைக்குடா பகுதியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இப்போது அந்த சுத்திகரிப்பு நிலையத்தில் மின் இணைப்பு பெறப்பட்டு, சோதனை ஓட்டம் நடக்கிறது.

எனவே அக்னிதீர்த்தக் கடலில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்பட்டு உள்ளது. புதிய சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் தண்ணீர், அங்குள்ள 300 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் பல்வேறு வகையான மரங்களை வளர்க்க பயன்படுத்தப்படும்" என்றார். இதையடுத்து விசாரணையை ஜனவரி மாதம் 27-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x