Published : 18 Dec 2024 02:03 PM
Last Updated : 18 Dec 2024 02:03 PM
ஶ்ரீவில்லிபுத்தூர்: ஶ்ரீவில்லிபுத்தூரில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக ஆண்டாள் கோயில் பெரிய பெருமாள் சந்நிதி கல் மண்டபத்தில் தேங்கிய மழைநீர் காலை வரை வடியாததால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். கழிவுநீர் கால்வாயை தூர்வார வலியுறுத்தி பலமுறை முறையிட்டும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
108 வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்ற ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் என்பது ஆண்டாள் ரெங்கமன்னார் கோயில், வடபத்ரசாயி கோயில் ஆகிய இரு வளாகங்களை கொண்டது. இதில் முதன்மையான வடபத்ரசாயி கோயிலில் தரைத்தளத்தில் நரசிம்மர் சந்நிதியும், மேல் தளத்தில் மூலவர் வடபத்ரசயனர்(பெரிய பெருமாள்) சுயம்பு மூர்த்தியாக சயன திருக்கோலத்திலும் அருள் பாலிக்கின்றனர். இந்த கோயில் வளாகத்தில் பெரிய கோபுரம் அருகே பெரியாழ்வார் சந்நிதி உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை பெய்த மிதமான மழையில் கோயில் வெளி பிரகாரம் மற்றும் பெரியாழ்வார் சந்நதி முன் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியது. அப்போதே பெரிய கோபுரம் எதிரே உள்ள கழிவுநீர் கால்வாய் அடைப்பு காரணமாகவே கோயிலினுள் மழைநீர் தேங்கியதாக பக்தர்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் நகராட்சி நிர்வாகம் சார்பில் கழிவுநீர் கால்வாயை தூர்வார எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் செவ்வாய் கிழமை இரவு பெய்த கனமழையில் வடபத்ரசாயி கோயில் வெளி பிரகாரம் மட்டுமின்றி உள்பிரகாரத்தில் கல் மண்டபம் முழுவதும் குளம் போல் மழைநீர் தேங்கியது.
திங்கள் கிழமை மார்கழி மாதம் தொடங்கியதை அடுத்து தினசரி அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஶ்ரீவில்லிபுத்தூர் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலையில் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள், கோயில் வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கி இருந்ததால் சிரமத்திற்கு ஆளாகினர்.
மிதமான மழைக்கு கோயில் வெளி பிரகாரத்தில் மழைநீர் தேங்கிய போதே, கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரி இருந்தால் கோயிலினுள் மழைநீர் தேங்கி இருக்காது. நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஆண்டாள் கோயில் கல் மண்டபத்தில் மழை நீர் தேங்கியதாக பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT