Published : 18 Dec 2024 12:51 PM
Last Updated : 18 Dec 2024 12:51 PM
சென்னை: மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் 37-வது ஆண்டு நினைவு நாளான டிச.24ம் தேதி மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளதாக, அக்கட்சி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆர், நம்மை ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டு அமரர் ஆகிய நாள் 24.12.1987.எம்ஜிஆரின் 37-வது ஆண்டு நினைவு நாளான டிச.24ம் தேதி செவ்வாய் கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும் மரியாதை செலுத்த உள்ளனர். அதனைத் தொடர்ந்து, எம்ஜிஆரின் நினைவிட நுழைவு வாயில் உட்புறத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சிகளில், கட்சியின் சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளும், எம்ஜிஆர் மன்றம், அம்மா பேரவை, எம்ஜிஆர் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கட்சியின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கட்சியினரும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
எம்ஜிஆரின் நினைவு நாளான டிச.24 அன்று, எம்ஜிஆர் உடைய நினைவுகளை நெஞ்சில் சுமந்துள்ள, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு; மாநகராட்சிப் பகுதி, வட்ட அளவில், கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கட்சியினரும், தங்கள் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள எம்ஜிஆரின் உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்தும்; ஆங்காங்கே எம்ஜிஆருடைய உருவப் படங்களை வைத்து மாலை அணிவித்தும், மலர் அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் செய்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
கட்சி அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், டிச.24 அன்று எம்ஜிஆரின் உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்தும்; ஆங்காங்கே எம்ஜிஆர் உடைய திருஉருவப் படங்களை வைத்து மாலை அணிவித்தும் மலர் அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment