Published : 18 Dec 2024 06:06 AM
Last Updated : 18 Dec 2024 06:06 AM

கிழக்கு கடற்கரை சாலை​யில் உள்ள 13 மீனவ கிராமங்களுக்கு மின்​சாரம் வழங்க நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 13 மீனவ கிராமங்களுக்கு முழுவதுமாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சோழிங்கநல்லூர் அக்கரை பகுதியில் உத்தண்டி முதல் ஊரூர் வரை 13 மீனவக் குடியிருப்பை சார்ந்த பஞ்சாயத்தார்களிடம் குறைக்கேட்பு முகாம் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நேற்று நடைபெற்றது. சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ், வேளச்சேரி தொகுதி எம்எல்ஏ அசன் மவுலானா, மீனவர் நலத்துறை இயக்குநர் இரா.கஜலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முகாமில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: நீலாங்கரை, பாலவாக்கம், கொட்டிவாக்கம் ஆகிய குப்பங்களில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. பணிகள் தடைபட்டாலும், மீண்டும் அப்பணி நடைபெற தொடங்கியுள்ளது. ஊரூர் குப்பத்தில் பாதாள சாக்கடையின் உள்ள குழாய்கள் சிறிய அளவில் உள்ளதால், அதனை பெரிய அளவிலான குழாய்களாக மாற்றும் பணிகள் ஜனவரி மாதத்துக்கு பிறகு நடைபெறவுள்ளது.

இந்த 13 மீனவ கிராமங்களில் மீன்வலை உலர்த்துவதற்கு ஓர் அரங்கம் வேண்டும் என்பதுதான் கோரிக்கையாக உள்ளது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் விதிகளை மீறாமல் அரங்கம் அமைத்தால்தான் எதிர்காலத்தில் பணிகள் நடைபெறும்போது அப்பணி தடைபடாமல் நிறைவேற்ற வசதியாக இருக்கும். மிகப்பெரிய அளவில் அரங்கம் அமைக்காமல், தற்காலிகமாக இரும்பு குழாய்களையும், ஆஸ்பராஸ் அட்டைகளை கொண்டு அமைத்து, முதல்வரின் அனுமதியைப் பெற்று திறந்து வைக்கலாம்.

மின்சாரம் வேண்டுமென்று தெரிவித்துள்ளனர். முதல்வரின் கவனத்துக்கு எடுத்து சென்று, பட்டா இடத்துக்கு மட்டும்தான் மின்சாரம் வழங்கப்படும் போன்ற கடுமையான விதிகளை தளர்த்தி, அடிப்படை தேவையான மின்சாரத்தை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். மீனவர்களை மட்டுமே அந்த வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். அதற்காக அரசு அதிகாரிகள் வரும்போது உறுப்பினர் சேர்ப்பதற்கான முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அரசின் சார்பில் வழங்கப்படும் சலுகைகளை பெறுவதற்கு 18 வயதைக் கடந்தவர்கள் உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இந்த 13 மீனவ கிராமங்களின் பிரத்யேக கோரிக்கை என்பது நலவாரியம், பட்டா போன்றவைதான். சென்னை முழுவதும் பட்டா வழங்குவதற்கு துணை முதல்வர் தலைமையில் 7 அமைச்சர்கள் கொண்ட குழுவை நியமித்து, கிராமநத்தம் போன்ற பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x