Published : 18 Dec 2024 05:42 AM
Last Updated : 18 Dec 2024 05:42 AM

அக​விலைப்படி உயர்வு வழங்க கோரி போக்கு​வரத்து ஓய்வூதியர் அரை ஆடை போராட்​டம், சாலை மறியல்

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு 9 ஆண்டுகளுக்கு மேலாக மறுக்கப்படும் அகவிலைப்படி உயர்வை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கம் சார்பில் சென்னை பல்லவன் சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: ம.பிரபு |

சென்னை: அகவிலைப்படி உயர்வு வழங்கக் கோரி போக்குவரத்து ஓய்வூதியர்கள் அரை ஆடை போராட்டம், சாலை மறியல் ஆகிய போராட்டங்களில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு 9 ஆண்டுகளுக்கு மேலாக மறுக்கப்படும் அகவிலைப்படி உயர்வை வழங்கக் கோரி சென்னை, பல்லவன் சாலையில் அரை ஆடை போராட்டம் நடைபெறும் என அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், ஆர்ப்பாட்டம் நடத்துமாறும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வழி செய்யப்படும் எனவும் காவல் துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அகவிலைப்படி உயர்வு, ஓய்வு பெற்றவர்களுக்கான பணப்பலன், மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சங்கத்தின் தலைவர் டி.கதிரேசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பேசும்போது, ``ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்த முதல்வர் ஸ்டாலின், 4 ஆண்டுகள் ஆகியும் ஓய்வூதியர்களின் கோரிக்கையை நிறைவேற்றாதது ஏன்? இதற்கு முதல்வரும், துறை அமைச்சரும் பதிலளிக்க வேண்டும். ஓய்வூதியர்களின் வயதை மதித்து கோரிக்கைக்கு அரசு ஆவன செய்ய வேண்டும்'' என்றார்.

அண்ணா தொழிற்சங்க பேரவைச் செயலாளர் ஆர்.கமலகண்ணன் பேசும்போது, ``நிலுவை அகவிலைப்படியை தவணை முறையாக பெறுவதற்கு திமுக மற்றும் கூட்டணி சங்கங்கள் கடந்த காலத்தில் ஒப்புக்கொள்ளவில்லை. அப்போதே ஒப்புக் கொண்டிருந்தால் ஓய்வூதியர்களுக்கு இந்த நிலை இருந்திருக்காது.

இவ்வாறு வஞ்சிப்பதால் ஓய்வூதியர்களின் வாக்குகள் நிச்சயம் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும். ஓய்வூதியர்களின் பிரச்சினைக்கு வலிமையான போராட்டத்தை அதிமுகவும் ஒருங்கிணைக்கும்'' என்றார்.

ஆர்ப்பாட்டத்தின்போது ஓய்வூதியர்கள் அவ்வப்போது ஆடைகளை களைய முயன்றபோது, ஓய்வூதியர்களுக்கும், காவல் துறைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தொடர் சலசலப்பு இருந்து வந்தது.

இந்நிலையில் 3 மணிக்கு மேலாகியும் பேச்சுவார்த்தைக்கு துறை சார்பில் அழைப்பு இல்லாததால், ஓய்வூதியர்கள் அனைவரும் மேலாடையை களைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலையை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

பின்னர் தலைமைச் செயல​கத்​தில், போக்கு​வரத்​துத் துறை செயலருடன் ஓய்வூ​தி​யர்கள் பேச்சு​வார்த்தை நடத்​தினர். இது தொடர்பாக அவர்கள் கூறும்​போது, ``வரும் 26-ம் தேதி மீண்​டும் பேச்சு​வார்த்​தைக்கு வருமாறும் அழைப்பு விடுத்த செயலர், அகவிலைப்படி உயர்வு தொடர்பாக நல்லதொரு அறிவிப்பை அன்று வெளி​யிடு​வ​தாகத் தெரி​வித்​தார். 3 மாதத்​துக்கான பணப்​பலன்களை விரைந்து வழங்​க​வும் நடவடிக்கை எடுப்​பதாக அவர் உறுதி​யளித்​துள்ளார்'' என்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x