Published : 18 Dec 2024 09:11 AM
Last Updated : 18 Dec 2024 09:11 AM

“திமுக கூட்டணியை மறுபரிசீலனை செய்வோம்!” - தவாக தலைவர் தி.வேல்முருகன் தடாலடி பேட்டி

பரபரப்புக்கு பஞ்சமில்லாத தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், “வெள்ள நிவாரணம் என்ற பெயரில் ரூ.2 ஆயிரத்தை பிச்சை போடுவது போல் இருக்கிறது?” என கூட்டணியில் இருந்து கொண்டே அரசுக்கு எதிராக ஆத்திரத்தைக் கொட்டி இருப்பதுடன் இன்னும் சில குறைகளையும் சூடாக சுட்டிக்காட்டி இருக்கிறார். இது தொடர்பாக அவரிடம் பேசியதிலிருந்து...

வெள்ள நிவாரணமாக சென்னைக்கு ரூ.6 ஆயிரம் கொடுக்கும்போது வடமாவட்டங்களுக்கு மட்டும் ரூ.2 ஆயிரம் வழங்குவது பிச்சை போடுவது போல இருக்கிறது என காட்டமாக பேசியது ஏன்?

​நானே 20 புயல்​களுக்கு மேல் பார்த்​துள்ளேன். புயல் வெள்ளம் வரும்​போதெல்​லாம் கெடிலம் மற்றும் தென்​பெண்ணை ஆறுகளுக்கு நடுவில் அமைந்​துள்ள எனது பண்ருட்டி தொகு​தி​தான் சின்​னாபின்ன​மாகிறது. சாத்​தனூர் அணையைத் திறந்​து​விட்​டாலோ, கனமழை​யால் காட்​டாற்று வெள்ளம் ஏற்பட்​டாலோ கடுமை​யாகப் பாதிக்​கப்​படு​கிறோம். அப்படி இருக்கை​யில், வெள்ள நிவாரணமாக ரூ.10 ஆயிர​மாவது கொடுக்க வேண்​டும். அதில்​லாமல் ரூ.2 ஆயிரம் கொடுப்பது பிச்சை போடுவது மாதிரித்​தானே... அதைத்​தான் அப்படிச் சொன்னேன். இந்த பாதிப்​பைத் தடுக்க அரசூரில் தடுப்பணை கட்ட வேண்​டும் என்று 2001-ம் ஆண்டு முதல் அதிமுக, திமுக அரசுகளிடம் போராடி வருகிறேன்.

உரிய வெள்ள நிவாரணம் வழங்காவிட்டால் அரசுக்கு எதிராக நானே களத்தில் இறங்கிப் போராடுவேன் என்று மிரட்டும் தொனியில் கூறியிருக்கிறீர்களே..?

வெள்ள நிவாரணம் ரூ.2 ஆயிரம் இன்ன​மும் 28 ஆயிரம் பேருக்கு போய்ச் சேரவில்லை. இதனால் எனது தொகு​தி​யில் பலரும் சாலை மறியலில் ஈடுபட்​டுள்​ளனர். அவர்​களுக்காக நானும் தலைமைச் செயல​கம், தொகுதி என எங்கும் போராடத் தயாராக உள்ளேன். இதில் எந்த சமரசத்​திற்​கும் இடமில்லை. மொட்டை மாடி, மரங்​களில் ஏறி மக்கள் உயிர் பிழைத்​திருக்​கிறார்​கள். அவர்​களது உடைமைகள் முழு​வதுமாக வெள்​ளநீரில் வீணாகி​விட்​டது. கடந்த 300 ஆண்டு​களுக்​குப் பிறகு கெடிலம் ஆறு, தென்​பெண்ணை ஆற்றில் வெள்​ளப்​பெருக்கு ஏற்பட்​டுள்​ளது. மக்களுக்கு இதுவரை இல்லாத பாதிப்பு என்ப​தால் தான் நிவாரணம் பெற்றுத் தருவ​தில் உறுதியாக இருக்​கிறேன்.

தேர்தல் சமயத்தில் கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கு உரிய மரியாதை தருகிறார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்து அமைச்சர்களாகிவிட்டால் அவர்களது வீட்டு வேலைக்காரர்களோ, உதவியாளர்களோ தான் போனில் பேசுகிறார்கள் என்று ஆதங்கப்பட்டிருக்கிறீர்களே?

அரசு விழாக்​களுக்கு அழைப்​பிதழ் அச்சிடும்​போது அமைச்​சர்​கள், ஆளுங்​கட்சி எம்எல்​ஏ-க்களை அடுத்து ஐந்தாவது ஆறாவது இடத்​தில் எனது பெயர் இடம்​பெறுகிறது. மேடை​யிலும், நான் பிரச்​சாரம் செய்து எம்எல்ஏ ஆனவர்​களுக்கு பின்​னால் என்னை அமரச் செய்​கிறார்​கள். சுயமரி​யாதை, தன்மானத்தை இழந்து எப்படி இருக்க முடி​யும்? துணை முதல்வர் கடலூர் மாவட்​டத்​திற்கு வந்த​போது கூட்டணி கட்சித் தலைவர்கள் அரவணைக்​கப்​பட​வில்லை.

மழை வெள்​ளத்​தின் போது துணை முதல்வர் எனது தொகு​திக்கு வந்த​போதும் எனக்​குத் தகவலும் கொடுக்​கப்​பட​வில்லை. எந்த அமைச்சர் வந்தா​லும் இப்படித்​தான். பேரிடர் கண்காணிப்பு அதிகாரி​களும் அதுபோலவே நடந்து கொள்​கிறார்​கள். எங்களை அமைச்​சர்​களோ, அதிகாரிகளோ மதிப்​ப​தில்லை. கோபித்​துக் கொண்​டால் வேளாண் அமைச்சர் எம்.ஆர்​.கே.பன்னீர்​செல்வம் மட்டும் கண்டு​கொள்​வார். முன்​னாள் முதல்வர் கருணாநிதி ஒருபோதும் இப்படி நடந்​து​கொண்​ட​தில்லை. அவரைப் போல இப்போதுள்ள திமுக தலைவர்கள் இல்லை என்பது வேதனையான உண்மை.

இத்தனை வருத்தங்களை வைத்துக்கொண்டு திமுக கூட்டணியில் இனியும் தொடர முடியும் என கருதுகிறீர்களா?

பாதிக்​கப்​பட்ட மக்களின் குரலாகத்​தான் எனது குரல் ஒலிக்​கிறது. ஆளும் கட்சி​யும், அரசும் இதை சகித்​துக் கொண்டு நிவாரணம் தேட உரிய முயற்​சி​யில் இறங்க வேண்​டும். அதைவிடுத்து வேல்​முருகன் திமுக சின்னத்​திலே போட்​டி​யிட்டு வெற்றி பெற்று​விட்டு இப்படி பேசலாமா என எதிர்​வினை​யாற்றி​னால் அதற்கு நானும் கடுமையாக எதிர்​வினை​யாற்று​வேன்.

மக்களின் வலியைப் பிரதிபலிப்​பது​தான் ஒரு எம்எல்​ஏ-​வின் கடமை. அதைத்​தான் நான் செய்து கொண்​டிருக்​கிறேன். திமுக சின்னத்​தில் போட்​டி​யிட்​டேன், கூட்​ட​ணி​யில் இருக்​கிறேன் என்ப​தற்காக மக்கள் பிரச்​சினை​யில் சமரசம் செய்து கொண்டு என்னால் இயங்க முடி​யாது.

வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் பாமக காட்டும் வேகம் உங்களிடம் இல்லை. கூட்டணியில் இருப்பதால் திமுக அரசுக்கு அழுத்தம் தருவதில்லை என்கிறார்களே?

இது முற்றி​லும் தவறு. தமிழக சட்டப்​பேர​வை​யில் பலதடவை இது குறித்து பேசி​யுள்​ளேன். உச்ச நீதி​மன்றம் தரவு​கள்​தான் கேட்​டுள்ளதே தவிர, சாதி​வாரி இடஒதுக்​கீடு தரக்​கூ​டாது எனச் சொல்​ல​வில்லை. சாதி​வாரி கணக்​கெடுப்பு நடத்தி, வன்னியர்கள் தொடர்பான தரவுகளை உச்ச நீதி​மன்​றத்​தில் சமர்ப்​பித்து அவர்​களுக்கான உள் இடஒதுக்​கீட்​டைப் பெற்றுத் தாருங்கள் என்று முதல்​வரிடம் வலியுறுத்​தினேன். அவரும் செய்​வதாக வாக்​குறுதி அளித்​தார். இப்போது ஏன் செய்ய மறுக்​கிறார்கள் என்று தெரிய​வில்லை.

சமூகநீதி வழிவந்த அரசு என்று சொல்​லும் திமுக அரசு ஏன் சாதி​வாரி கணக்​கெடுப்பு நடத்த மறுக்​கிறது, தயங்​கிறது எனத் தெரிய​வில்லை. சாதி​வாரி கணக்​கெடுப்பு நடத்தி அந்தந்த சாதி​களின் எண்ணிக்கைக்கு ஏற்ற​வாறு கல்வி மற்றும் வேலை​வாய்ப்​பில் இடஒதுக்​கீடு வழங்க வேண்​டும். அதுதான் சமூகநீதி. முன்னேறிய சாதி​கள், சமூகநீ​தி​யைப் பிடிக்காத சாதிகள் முதல்​வருக்கு தவறான தகவல்களை தருகின்​றனர். எந்த சக்தி முதல்​வரின் கைகளைக் கட்டிப்​போடு​கிறது? இந்த விவகாரத்​தில் முதல்வர் தனது மவுனத்​தைக் கலைக்க வேண்​டும்.

எந்தெந்த விஷயங்களில் பிடிவாதமாகவும் உறுதியாகவும் சமரசம் செய்துகொள்ளாமலும் இருக்கிறீர்கள்?

மூன்று விடயங்​களில் எனக்கு சமரசமே கிடை​யாது. ஒன்று, சாதி​வாரி கணக்​கெடுப்பு நடத்தி சமூகநீ​தியை உறுதி செய்ய வேண்​டும். இரண்​டாவது, தனித்​தமிழீழ அரசை உருவாக்கு​வதற்கு பொது​வாக்​கெடுப்பு நடத்துவது மற்றும் இனப்​படு​கொலைக்கு சர்வதேச நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி தமிழக சட்டப்​பேர​வை​யில் தீர்​மானம் நிறைவேற்ற வேண்​டும்.

இந்த இரண்​டை​யும் உள்ளடக்கிய தீர்​மானத்தை சட்டப்​பேர​வை​யில் முன்​னாள் முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்​தார். அதுபோல திமுக அரசும் தீர்​மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்​டும் என்று திமுக ஆட்சிக்கு வந்த காலத்​தில் இருந்தே வலியுறுத்தி வருகிறேன். இது குறித்து நாடாளு​மன்​றத்​தி​லும் திமுக கூட்டணி கட்சி எம்பி-க்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்​டும்.

மூன்​றாவது, எனது பண்ருட்டி தொகு​தி​யில் நிரந்த வெள்ள தடுப்புப் பணிகள், கலைக்​கல்​லூரி, வேளாண் கல்லூரி தொடங்க வேண்​டும். இந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை எனது போர்க்​குரல் தொடரும். வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் மேற்​கண்ட 3 கோரிக்கைகள் குறித்த அறிவிப்​பை​யும், அதற்கான விரிவான செயல் திட்​டத்​தை​யும் வெளியிட வேண்​டும். இல்லா​விட்​டால், பொதுக்​குழு​வைக் கூட்டி, திமுக கூட்​ட​ணி​யில் இருக்​கலாமா, வேண்​டாமா என்று மறுபரிசீலனை செய்து முடி​வெடுப்​போம்.

எனக்கு பதவி பெரிதல்ல. கூட்​டணி ​முக்​கியமில்லை. எனக்கு ​வாக்​களித்த தொகுதி மக்​களுக்கான கோரிக்கைகள் நிறைவேற்​றப்​ப​டா​மலோ, எல்லா கட்​சிகளும் ​விரும்​பும் ​சா​தி​வாரி கணக்​கெடுப்பு நடத்​தப்​ப​டாமலோ இருந்​தால் ​திமுக கூட்​ட​ணி​யில் இருந்து கொண்​டு மக்​களை எப்​படி சந்​திக்​க முடியும்​?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x