Published : 18 Dec 2024 01:05 AM
Last Updated : 18 Dec 2024 01:05 AM
செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி நேற்று மீண்டும் நேரில் ஆஜரானார்.
தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி, கடந்த 2006-2011-ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை மற்றும் கனிமவளத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக 2 லட்சத்து 64,644 லோடு லாரி செம்மண் அள்ளியதாகவும், இதனால் அரசுக்கு ரூ.28 கோடியே 36 லட்சத்து 40,600 இழப்பு ஏற்பட்டதாகவும் பொன்முடி மீது குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து, அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் உட்பட பலர் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் 2012-ல் அதிமுக ஆட்சியின்போது வழக்குப் பதிவு செய்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த ஆண்டு அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்தது.
அதைத்தொடர்ந்து அமைச்சர் பொன்முடி, அவரது மகனும் முன்னாள் எம்.பி.யுமான கவுதம சிகாமணி மற்றும் அவர்கள் தொடர்புடையவர்களுக்குச் சொந்தமான 7 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, அமைச்சர் பொன்முடி வீட்டில் ரூ.81.7 லட்சம் ரொக்கம், ரூ.13 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், வங்கிக் கணக்கில் இருந்த நிரந்தர வைப்புத்தொகை ரூ.41.9 கோடி முடக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடிக்கு சம்மன் அனுப்பி சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரின் ரூ.14.21 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள் முடக்கப்பட்டன. அதேசமயம் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக விசாரிப்பதற்காக அமைச்சர் பொன்முடிக்கு சில தினங்களுக்கு முன் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சம்மன் அனுப்பி இருந்தனர். இதையடுத்து, நேற்று (டிச.17) காலை 11.30 மணியளவில் சென்னை ஆயிரம்விளக்கு, கிரீம்ஸ் சாலையில் உள்ள மற்றொரு அமலாக்கத்துறை அலுவலகத்தில் பொன்முடி நேரில் ஆஜரானார்.
அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக ஏற்கெனவே சோதனை நடத்தி பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அடிப்படையிலும் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அதற்கு பொன்முடி அளித்த பதில்களை அமலாக்கத் துறையினர் வாக்குமூலமாகப் பதிவு செய்துள்ளனர். வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT