Published : 18 Dec 2024 12:51 AM
Last Updated : 18 Dec 2024 12:51 AM
திருநெல்வேலி/ நாகர்கோவில்: கேரள மாநிலத்தில் இருந்து அபாயகரமான மருத்துவக் கழிவுகளை வாகனத்தில் கொண்டு வந்து நெல்லை அருகேயுள்ள நீர்நிலைகளில் கொட்டியது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள மண்டல புற்று நோய் மையத்திலிருந்து வாகனத்தில் கொண்டுவரப்பட்ட அபாயகரமான மருத்துவக் கழிவுகள், நெல்லை மாவட்டம் நடுக்கல்லூர், கோடகநல்லூர் பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் கொட்டப்பட்டுள்ளன.
மேலும், கழிவுகள் அடங்கிய மூட்டைகளில், புற்றுநோய் மையத்தில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் விவரங்கள் அடங்கிய படிவங்களும் இருந்தன. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
3 பிரிவுகளில் வழக்கு: மருத்துவக் கழிவுகளை கொட்டி நீர்நிலைகள் மற்றும் வயல்வெளிகளை மாசுபடுத்தி உள்ளதாக சுத்தமல்லி போலீஸில், பழவூர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ள தனியார் இடத்தின் மேற்பார்வையாளர் புகார் செய்தனர். இதையடுத்து, போலீஸார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக நெல்லை ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோடகநல்லூர் பகுதியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது தொடர்பாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மூலம் மருத்துவக் கழிவுகளை ஆய்வுக்கு உட்படுத்திடவும், அவற்றை தகுந்த முறையில் அகற்றவும்
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டக்கூடாது என்று அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், இது போன்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியிலும்... குமரி - கேரள எல்லையான நெட்டா சோதனைச் சாவடியில் நேற்று போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த மினிடெம்போவை நிறுத்தி சோதனையிட்டதில், அதில் உணவுக் கழிவுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸார், ஓட்டுநர் தக்கலை சுதிஷ் (24), டெம்போ உரிமையாளர் அஜித் (27) ஆகியோரை கைது செய்து, பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.
அண்ணாமலை கண்டனம்: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதளப் பக்கத்தில், “கேரளாவின் பயோமெடிக்கல், பிளாஸ்டிக், இறைச்சிக் கழிவுகளின் குப்பைக் கிடங்காக தென் மாவட்டங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வரும் ஜனவரி முதல் வாரத்தில் மக்களைத் திரட்டி, உயிரியல் மருத்துவக் கழிவுகள் மற்றும் குப்பையை லாரிகளில் ஏற்றிச் சென்று, கேரளாவில் கொண்டு கொட்டுவோம். முதல் லாரியில் நானும் செல்வேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுற்றுச்சூழலுக்கும், சுகாதாரத்துக்கும் கேடு விளைவிக்கும் வகையில் மருத்துவக் கழிவுகளை தமிழகத்தில் கொட்டும் கேரள அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT