Published : 18 Dec 2024 12:46 AM
Last Updated : 18 Dec 2024 12:46 AM
தூத்துக்குடி: அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி பயின்று, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 30-ம் தேதி தூத்துக்குடியில் தொடங்கிவைக்கிறார்.
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டத்தில் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அரசு உதவிபெறும் பள்ளி மாணவிகளுக்கும் புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் வரும் 30-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கிவைக்கிறார்.
இது தொடர்பாக வங்கியாளர்கள், அரசு அலுவலர்கள், கல்லூரிதொடர்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் தலைமை வகித்தார். துறைச் செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் பேசும்போது, “2024- 2025-ம் கல்வியாண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி பயின்று, உயர் கல்வியில் முதலாமாண்டு, இரண்டாமாண்டு மற்றும் இறுதியாண்டு பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் வகையில் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் வரும் 30-ம் தேதி நடைபெறும் அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT