Published : 17 Dec 2024 04:13 PM
Last Updated : 17 Dec 2024 04:13 PM
திருப்பத்தூர்: தமிழக சட்டப்பேரவை தேர்தலின் போது உண்மைக்குப் புறம்பான தகவல்களை தாக்கல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி திருப்பத்தூர் நீதிமன்றத்தில் இன்று (டிச.17) ஆஜரானார். இதையடுத்து, வழக்கு விசாரணை அடுத்த மாதம் 6-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி போட்டியிட்டார். அப்போது தேர்தல் ஆணையத்தில் அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் அவர் தனது சொத்து விவரங்களை குறைத்து, தவறான தகவல்களை கொடுத்திருப்பதாக சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து, கடந்த 2021-ம் ஆண்டு முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது வேலூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராமமூர்த்தி என்பவர் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். அதில், தேர்தல் ஆணையத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தன் சொத்துகளை குறைத்து தவறான தகவல்களை அளித்திருப்பதால், அவரது வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என ராமமூர்த்தி தெரிவித்திருந்தார். இந்த புகார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது.
இதையடுத்து, இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்திலும் தொழிலதிபர் ராமமூர்த்தி வழக்கு தொடர்ந்தார். ராமமூர்த்தி அளித்த புகாரை விசாரித்து கே.சி. வீரமணி மீது உரிய நடவடிக்கை எடுக்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் ஆணையம் நடத்திய ஆய்வில் கே.சி.வீரமணி, பிரமாணப் பத்திரத்தில் சொத்துகளை குறைத்து தவறான தகவல்களை தாக்கல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் திருப்பத்தூர் ஜேஎம்-1 நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி நவம்பர் 26-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என திருப்பத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அந்த நாளில் கே.சி.வீரமணி ஆஜராகததால் வழக்கு விசாரணை டிச.17ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி, இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி ஆஜரானார். வழக்கை விசாரித்த ஜேஎம்-1 மாஜிஸ்திரேட் மகாலட்சுமி வழக்கை ஜன.6-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார். அதன்பிறகு, கே.சி.வீரமணி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். வழக்கு விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரானதால் நீதிமன்ற வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது. நீதிமன்ற வளாகம் முன்பாக திருப்பத்தூர் நகர காவல் துறையினர் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment