Published : 17 Dec 2024 12:08 PM
Last Updated : 17 Dec 2024 12:08 PM
சென்னை: “2026-க்குப் பிறகு திமுகவின் முழு ஆதரவை பாஜகவுக்கு அளித்து மத்திய அமைச்சர் பொறுப்புகளை பெற திமுக தயாராகிவிட்டது.” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தெனாலியை விட பயப்பட்டியல் நீள்கிறது, என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியிருப்பது தொடர்பான கேள்விக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பதிலில், “திமுகவின் அறிக்கையில் உள்ள அனைத்துக்கும் பொருந்தக்கூடிய ஒரு கட்சி என்றால் அது திமுகதான். கடந்தகால அரசியல் வரலாற்றைப் பார்க்க வேண்டும்.
பாஜகவுடன் 5 வருடம், முழுமையாக அந்த ஆட்சியினுடைய சுவையை அனுபவித்த திமுக அதன்பிறகு, அவர்களை கழற்றி விட்டனர். 1998-ல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பாஜகவுடன் கூட்டணி வைத்தார். ஆனால், காவிரி நதி நீர் பிரச்சினையில், ஒரு 205 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடும் பிரச்சினையில், நமது உரிமைக்கான பிரச்சினைக்கு மத்திய அரசு அன்று செவிசாய்க்காத சூழலில் அதிமுக பாஜகவுக்கு அளித்த வந்த ஆதரவை ஜெயலலிதா வாபஸ் பெற்றார். அதனால் வாஜ்பாய் தலைமையிலான அரசு கவிழ்ந்தது.
அதற்கு முன்புவரை, மறைந்த முதல்வர் கருணாநிதி பாஜக ஒரு மதவாத சக்தி, எந்தக் காலத்திலும் அந்த கட்சியுடன் கூட்டணி இல்லை என்று கூறிவந்தார். 3 மாதங்களாக கூறி வந்தவர், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதும், பாஜகவுடன் கூட்டணி அமைத்து திமுக ஆட்சி சுகத்தை முழுமையாக அனுபவித்தது. திமுகவைப் பொறுத்தவரை எப்போதுமே இரட்டை வேடமிடும் கட்சி. சந்தர்ப்பவாத, பச்சோந்தித்தனமான அரசியல் செய்வதில் திமுகவினர் கில்லாடி. பதவிக்காக எது வேண்டுமானாலும் செய்பவர்கள். எந்தளவுக்கு வேண்டும் என்றாலும் இறங்கிச் செல்வார்கள்.
ஒரு அமைச்சரை பிரதமர் சந்தித்த வரலாறு உண்டா? தற்போது துணை முதல்வராக இருக்கும் உதயநிதி, பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்கிறார். உடனடியாக பிரதமர் மோடியைச் சந்திக்க உதயநிதிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. எந்த மாநில அமைச்சர் பிரதமரை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது? பின்னர் முதல்வர் ஸ்டாலின் சென்று பிரதமர் மோடியைச் சந்தித்தார். திமுக-பாஜக இடையே எழுதப்படாத ஒப்பந்தம் இருக்கிறது. 2026க்காக காத்திருக்கிறார்கள். எம்.பிக்களானவர்கள் மத்திய அமைச்சர் பதவியில் இல்லை என்ற அதிகாரப்பசி திமுகவுக்கு வந்துவிட்டது. எனவே, திமுக பாஜகவுடன் சென்று ஐக்கியமாகிவிடும்.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஜெயிக்கப்போவது இல்லை. அது வேறு விஷயம். ஆனால், 2026-க்குப் பிறகு திமுகவின் முழு ஆதரவை பாஜகவுக்கு அளித்து மத்திய அமைச்சர் பொறுப்புகளை பெறவும் திமுக தயாராகிவிட்டது. கார்ப்பரேட் அரசாங்கத்தை நடத்தி வரும் பிரதமர் மோடிக்கு, நிதீஷ் குமாரையும், சந்திரபாபு நாயுடுவையும் மிரட்டுவதற்கு, திமுகவை ஆயுதமாக வைத்துக் கொள்வதற்கு இது வசதியாக இருக்கும்.
திமுக எந்த உறுதியான நிலைப்பாட்டிலும் இல்லை. நேரத்துக்கு ஏற்றது போல நிறத்தையும், கொள்கைகளையும் மாற்றிக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பவாத கட்சி என்றால், அது திமுகதான். இதுதான் ஸ்டாலின் மாடல்.” என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT