Published : 17 Dec 2024 06:38 AM
Last Updated : 17 Dec 2024 06:38 AM

​போக்கு​வரத்து இடையூறை காரணம் காட்டி ‘சங்கீத ஞானமு’ ரத ஊர்வலம் தடுத்து நிறுத்தம்

‘சங்கீத ஞானமு’ குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட ரதம், மயிலாப்பூர் பி.எஸ் பள்ளிக்கு சென்றபோது, அதை தடுத்து நிறுத்துவதற்கு தயாராக இருந்த போலீஸார். (அடுத்த படம்) பி.எஸ். பள்ளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரதம்.

சென்னை: போக்குவரத்து இடையூறை காரணம் காட்டி ‘சங்கீத ஞானமு’ ரத ஊர்வலம் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் சமீபகாலமாக கர்னாடக இசையில் ஆன்மிக தெய்வீக உணர்வுகள் குறைந்து, வியாபார நோக்கம் கூடிவருவதாக ஒருபுறம் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதனால் இசையை மீட்டெடுக்கும் வகையில், ஆன்மிக நாட்டம் உள்ள இசை கலைஞர்கள், ரசிகர்கள் "சங்கீத ஞானமு" என்ற ஒரு குழுவை அமைத்து செயல்பட்டு வருகின்றனர்.

அந்த குழுவுக்கு ஆன்மிக வழிகாட்டியாக மைசூரில் உள்ள ஸ்ரீ கணபதி சச்சிதானந்த சுவாமி உள்ளார். இந்த ஆண்டு, சபாக்களில் கர்னாடக சங்கீத கீர்த்தனைகள பாடவும், கேட்கவும் வருபவர்களுக்கு பக்தி உணர்வை ஊட்ட 2 விதமான முயற்சிகளை ‘சங்கீத ஞானமு’ குழு மேற்கொண்டது.

அதில் முதல் முயற்சி, சபாக்களில் சங்கீதத்துக்கும், ஆன்மிகத்துக்கும் உள்ள இணைபிரியா உறவு பற்றிய செய்திப்பலகைகள் வைப்பதும், அடுத்த முயற்சியாக நாயன்மார்கள், ஆண்டாள், கர்னாடக சங்கீத புரவலர்கள் சிலைகளை ரதம் ஒன்றில் வைத்து சபாக்களுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்வதும் ஆகும்.

அந்தவகையில், இந்த ஆண்டு டிச. 12-ம் தேதி முதல் டிச.28-ம் தேதி வரை 9 சபாக்களுக்கு அந்த ரதத்தை ஊர்வலமாக (சங்கீத பக்த ரத யாத்திரை) எடுத்துச்செல்ல ‘சங்கீத ஞானமு’ குழு முடிவு செய்தது. அதன்படி, ரத ஊர்வலத்துக்கு அனுமதி கோரி கடந்த டிச.5-ம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அக்குழுவினர் மனு அளித்தனர். ஆனால் போலீஸ் தரப்பில் இருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, அனுமதி கிடைத்ததாக கருதி ‘சங்கீத ஞானமு’ குழு திட்டமிட்டப்படி கடந்த 12-ம் தேதி மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலிருந்து, காலை 6 மணிக்கு ‘சங்கீத பக்த ரத யாத்திரை’ தொடங்கி, சுந்தரேஸ்வரர் தெரு வழியாக ஆர்.ஆர் சபாவுக்கு சென்றது.

பின்னர், மறுநாள் ஆர்.ஆர். சபாவில் இருந்து புறப்பட்டு, மயிலாப்பூர் பி.எஸ் பள்ளிக்கு ரத ஊர்வலம் சென்றது. இந்நிலையில், ரத ஊர்வலத்தால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படலாம், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படலாம் என கருதி, டிச.13-ம் தேதி ரத ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்து அக்குழுவுக்கு காவல்துறை கடிதம் அனுப்பியது.

இதையடுத்து, அன்றைய தினமே ரதம் சென்ற பகுதியில் போலீஸார் நிறுத்தப்பட்டு, மயிலாப்பூர் பி.எஸ் பள்ளி அருகில் ரத ஊர்வலம் தடுத்து அங்கேயே நிறுத்தப்பட்டது. இதுகுறித்து, சங்கீத ஞானமு குழுவினர் கூறும்போது, “ அடுத்தடுத்த நாட்கள் சனி, ஞாயிறு (14, 15-ம் தேதி) விடுமுறை என்பதால் எங்களால் காவல்துறை உயர் அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை. நீதிமன்றத்துக்கும் செல்ல முடியவில்லை. இதனால், ரத ஊர்வலம் தடைபட்டிருக்கிறது” என்றனர்.

இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, ‘‘இந்த ரத யாத்திரை குழுவினர் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். இந்த விவகாரம் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறோம். அதன் பின்னர் இறுதி முடிவு எட்டப்படும்,’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x