Published : 17 Dec 2024 12:48 AM
Last Updated : 17 Dec 2024 12:48 AM
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட, அல் உம்மா இயக்க தலைவர் எஸ்.ஏ.பாஷா உடல்நலக்குறைவால் கோவையில் நேற்று உயிரிழந்தார்.
கோவை தெற்கு உக்கடம், பொன் விழா நகரில் உள்ள ரோஸ் அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.ஏ.பாஷா (74). தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்க தலைவராக இவர் இருந்தார். கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவையில் தொடர் குண்டு வெடிப்புச் சம்பவம் நடைபெற்றது. இவ்வழக்கில் முதல் குற்றவாளியாக எஸ்.ஏ.பாஷா கைது செய்யப்பட்டார். அவருக்கு நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தொடர்ந்து 25 ஆண்டுகளாக கோவை மத்திய சிறையில், உயர் பாதுகாப்புப் பிரிவு கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் அறையில் எஸ்.ஏ.பாஷா அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் இருந்த சமயங்களில் வயோதிகம் காரணமாக உடல்நிலை பாதிப்புக்கு உள்ளானார்.
தொடர்ந்து கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ம் தேதி பாஷாவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் சிறை போலீஸார் அவரை பலத்த பாதுகாப்புடன் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து அனுமதித்தனர். பரோல் மறுக்கப்பட்டதை தொடர்ந்து தனது உடல்நிலையை காரணம் காட்டி, அவரது சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிணை கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவருக்கு 30 நாட்கள் பிணை வழங்கப்பட்டது. தொடர்ந்து அது நீட்டிக்கப்பட்டது. ராமநாதபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், பின்னர் ரேஸ்கோர்ஸில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்தாண்டு இறுதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு இருதயக் கோளாறு, நுரையீரல் தொற்று பாதிப்பு இருந்ததாகவும், மூளையில் சிறு பாதிப்பு இருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். பின்னர், அவர் வீடு திரும்பினார். வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் பாஷாவுக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர், பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலைில் நேற்று மாலை அவர் உயிரிழந்தார். அவரது உடலுக்கு குடும்பத்தினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT