Published : 16 Dec 2024 09:50 PM
Last Updated : 16 Dec 2024 09:50 PM
மதுரை: வைகை ஆற்றில் தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் 72 இடங்களில் கழிவுநீர் கலக்கிறது என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் மணிபாரதி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: “வருஷநாடு பகுதியில் உற்பத்தியாகி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 295 கிலோ மீட்டர் தூரம் பயணித்து கடலில் கலக்கிறது வைகை ஆறு. வைகையில் பல்வேறு இடங்களில் கழிவுநீர் கலக்கின்றன. மழைநீர் வடிகால் அனைத்தும் கழிவுநீர் கால்வாய்களாக மாறிவிட்டன. வைகை ஆற்று நீர் மாசடைந்து இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதனால் வைகை ஆற்றில் தேனி முதல் ராமநாதபுரம் வரை பல்வேறு இடங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க சிறப்பு குழு அமைத்து, ஆய்வு நடத்தவும், பல்வேறு இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும். வைகை ஆற்றை அசுத்தப்படுத்தியவர்களிடம் இழப்பீடு வசூலித்து, அந்த தொகையில் ஆற்றை மறுசீரமைப்பு செய்யவும் உத்தரவிட வேண்டும்” என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், “வைகை ஆற்றில் கழிவுநீர் கலக்கும் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்தனர். தேனி மாவட்டத்தில் 29 இடங்களிலும், திண்டுக்கல் மாவட்டத்தில் 2 இடங்களிலும், மதுரை மாவட்டத்தில் 41 இடங்களிலும் கழிவு நீர் கலக்கிறது.
வைகையில் 35 ஆண்டுகளாக கழிவுநீர் விடப்படுகிறது. நீர்வளத்துறை, நகராட்சி, சுற்றுச்சூழல், உள்ளிட்ட 5 துறை செயலர்கள் வைகை ஆற்றில் கழிவு நீர் நேரடியாக கலப்பதை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து பேச முடிவு செய்துள்ளனர். அதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும்” எனக் கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், “வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டும். நிதி இல்லை என கூறுவது ஏற்புடையது அல்ல. வைகையில் வரும் காலங்களில் கழிவுநீர் கலக்கக்கூடாது. வைகையில் கழிவு நீர் கலப்பவர்களுக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும். வைகையில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும் என சில ஆண்டுகளுக்கு முன் உத்தரவிட்டும் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்?
வைகை ஆற்றில் எங்கெங்கு கழிவு நீர் நேரடியாக கலக்கிறது? இதை தடுக்க என்ன என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? என நீர் வளத்துறை, நகராட்சி, சுற்றுச்சூழல் உள்ளிட்ட 5 துறைகளின் செயலர்கள் கலந்து பேசி ஒருங்கிணைந்த பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை ஜனவரிக்கு தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT