Published : 16 Dec 2024 07:22 PM
Last Updated : 16 Dec 2024 07:22 PM
சென்னை: தமிழக சிறைகளில் ரூ.14.25 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக மத்திய தணிக்கைத் துறை கடந்த 2022-ம் ஆண்டே அறிக்கை வெளியிட்ட நிலையில், இவ்வளவு காலதாமதமாக எஃப்ஐஆர் பதிவு செய்தது ஏன் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
புதுச்சேரியைச் சேர்ந்த கோகிலா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், புழல் சிறையில் தண்டனை கைதியாக உள்ள தனது கணவர், சிறையில் பார்த்த வேலைகளுக்கு கடந்த 4 மாதமாக சம்பளம் கொடுக்காமல் நிறுத்தி வைத்துள்ளனர், என தெரிவி்த்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.புகழேந்தி, தமிழக சிறைகளில் கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ததில் ரூ.14.25 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக மத்திய தணிக்கை துறை அறிக்கை வெளியிட்டுள்ளதாகக் கூறி, அது தொடர்பான செய்திகளை நீதிபதிகளிடம் காண்பித்தார்.
அதையடுத்து நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டிருந்தனர். அதன்படி இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்,எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையைப் படித்துப் பார்த்த நீதிபதிகள், சிறைகளி்ல் நடந்த இந்த முறைகேடு தொடர்பாக கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய தணிக்கைக்குழு அறிக்கை அளித்துள்ள நிலையில் கடந்த டிச.13-ம் தேதியன்று தான் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தனை நாட்களாக லஞ்ச ஒழிப்புத்துறை என்ன செய்து கொண்டிருந்தது?. வழக்குப் பதிவு செய்ய இத்தனை நாட்கள் தேவைப்பட்டதா? உடனடியாக நடவடிக்கை எடுக்காதது ஏன்?.
தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல் முறைகேடு தொடர்பாக அரசின் நிலைப்பாடு தான் என்ன? இது போன்ற புகார்களை அரசு தீவிரமாக எடுத்துக்கொள்கிறதா என கேள்வி எழுப்பினர். மேலும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்குள்ளாகும் அரசு அதிகாரிகள் அனைத்து பணபலன்களுடனும் ஓய்வு பெற ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என கருத்து தெரிவித்தனர். பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலர் தரப்பில் விரிவான அறி்க்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் ஜன.6-க்கு தள்ளி வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT