Last Updated : 16 Dec, 2024 05:23 PM

 

Published : 16 Dec 2024 05:23 PM
Last Updated : 16 Dec 2024 05:23 PM

வெள்ள பாதிப்பை தடுக்க நிரந்த தீர்வு கோரும் காஞ்சி - அருந்ததியர், ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதி மக்கள்!

அருந்ததியர் மற்றும் ஆதிதிராவிடர் நகர் பகுதியில் உள்ள மஞ்சள்நீர் கால்வாயில் பக்கவாட்டு சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

​காஞ்​சிபுரம் மாநக​ராட்​சி​யின் 21-வது வார்டு பகுதி​யில் மஞ்சள்​நீர் கால்​வாய் கரையில் அருந்​த​தியர் நகர், ஆதிதிரா​விடர் பகுதி அமைந்​துள்ளது. இங்கு, கடந்த 1983-ம் ஆண்டு முதல் சுமார் 64 குடும்​பங்கள் வசித்து வருகின்றன. ராஜாஜி மார்க்​கெட் பகுதி​யில் வசித்து வந்த இந்த மக்களை, அப்போதைய அரசு இடமாற்றம் செய்​த​தால் மேற்​கண்ட பகுதி​யில் வசித்து வருகின்​றனர்.

மேலும், மறைந்த முன்​னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்​தில் மேற்​கண்ட பகுதி​யில் வசிக்​கும் மக்களுக்கு பட்டா மற்றும் வீட்டு வசதி வாரி​யத்​தின் மூலம் ரூ.6 ஆயிரம் மானி​யத்​தில் தொகுப்பு வீடுகள் அமைத்து தரப்​பட்​டது. இந்த அருந்​த​தியர் நகர், மஞ்சள் நீர் கால்​வாய் கரையோரம் அமைந்​துள்ள​தால் ஒவ்வொரு ஆண்டும், மழைக்​காலத்​தின்​போது கால்​வா​யில் வெள்​ள ​​பெருக்கு ஏற்பட்டு அப்பகுதி வாசிகளின் குடி​யிருப்புகள் வெள்​ளத்​தில் மிதக்​கும் நிலை உள்ளது.

கடந்த சில நாட்​களுக்கு முன்பு ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட மழையின்​போது, வெள்ளம் சூழ்ந்​த​தால் அப்பகுதி மக்கள் அருகில் உள்ள ​பள்​ளி​யில் அமைக்​கப்​பட்ட முகாமில் தங்கவைக்​கப்​பட்​டனர். பின்னர், வெள்ளம் வடிந்​ததும் மீண்​டும் முகாமிலிருந்து குடி​யிருப்பு​களுக்கு திரும்​பினர். ஆனால், அப்பகு​தி​யில் எந்தவித சுகாதார பணிகளும் மேற்​கொள்​ளப்​பட​வில்லை.

இந்நிலை​யில், கடந்த 4 நாட்​களுக்கு முன்பு பெய்த கனமழை​யால் மஞ்சள்​நீர் கால்​வா​யில் ஏற்பட்ட வெள்​ள ​பெருக்​கால், மீண்​டும் குடி​யிருப்புகளை வெள்ளம் சூழ்ந்​தது. இதனால், அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்​கப்​பட்​டனர். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் கலைச்​செல்வி அப்பகு​தி​யில் நேரில் ஆய்வு மேற்​கொண்​டார்.

ஆனால், வெள்​ள ​​பா​திப்பு ஏற்படாமல் இருப்​ப​தற்கான நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க​வில்லை எனவும் பாஜகவை சேர்ந்​தவர் மாமன்ற உறுப்​பினராக உள்ள​தால், மாநக​ராட்சி நிர்​வாகம் உரிய நிவாரண பணிகளை மேற்​கொள்ள​வில்லை என்றும் குற்​றம்​சாட்​டப்​படு​கிறது.

அதனால், வெள்​ள ​​பா​திப்பு ஏற்படுவதை தடுக்​கும் வகையில் அருந்​த​தியர் நகர் பகுதி​யில் நிரந்தர கால்​வாய் கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்​டும் மற்றும் சேதமடைந்​துள்ள தொகுப்பு வீடு​களுக்கு பதிலாக புதிய வீடுகள் அமைத்து தர வேண்​டும் என அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்​துள்ளனர்.

அல்லிராணி

இதுகுறித்து, அப்பகு​தி​யில் வசிக்​கும் அல்லிராணி கூறிய​தாவது: மஞ்சள்​நீர் கால்​வா​யின் இருபக்​கங்​களி​லும் தடுப்பு சுவர் அமைத்​திருந்​தும், ஒவ்வொரு ஆண்டும் எங்கள் குடி​யிருப்புகள் வெள்​ளத்​தில் மிதக்​கும் நிலை உள்ளது. கால்​வா​யில் வரும் அதிகளவிலான தண்ணீரால் மட்டுமே எங்களுக்கு பாதிப்பு ஏற்படு​கிறதே தவிர, மழையினால் பாதிப்பு ஏற்படு​வ​தில்லை.

அதனால், இதுதொடர்பாக பல முறை அதிகாரி​களிடம் முறை​யிட்டும் நடவடிக்கை​யில்லை. மேலும், குடி​யிருப்புகளை மழைநீர் சூழும்​போதெல்​லாம் 2 நாட்கள் பள்ளி​யில் அமைக்​கப்​படும் முகாமில் தங்கவைப்​பதும், பின்னர் வெள்ளம் வடிந்​ததும் மீண்​டும் எங்களை குடி​யிருப்பு​களுக்கு அனுப்புவதை மட்டுமே மாநக​ராட்சி நிர்​வாகம் செய்து வருகிறது.

40 ஆண்டு​களாக நாங்கள் இங்கு வசித்து வருகிறோம். நத்தப்​பேட்டை ஊராட்​சியாக இருந்த​போ​தாவது, எங்களுக்கு அரசு நிவாரண உதவிகள் மற்றும் தொகுப்பு வீடுகள் கிடைத்தன. ஆனால், நகராட்சி மற்றும் மாநக​ராட்சி தரம் உயர்த்​தப்​பட்ட பிறகு அரசு உதவிகள் கிடைப்பது மிகவும் அரிதான செயலாக உள்ளது என்றார்.

குமரன்

இதுகுறித்து, அதே​பகு​தியை சேர்ந்த குமரன் கூறிய​தாவது: எங்கள் பகுதி தொகுப்பு வீடுகள் பல ஆண்டுகள் கடந்தவை என்ப​தால், மேற்​கூரைகள் சேதமடைந்​துள்ளன. சிலரின் வீடுகள் முற்றி​லும் இடிந்​துள்ளது. தற்போது, ஏற்பட்ட வெள்​ள ​​பா​திப்​பில் எங்கள் பிள்ளை​களின் பள்ளி புத்​தகங்கள் சேத மடைந்​துள்ளன. இதை மாற்றித் தருமாறு முறை​யிட்டும் நடவடிக்கை​யில்லை. அதேபோல், ஆதார் அட்டை, குடும்ப அட்டைகள் தண்ணீரில் நனைந்து சேதமடைந்​துள்ளன.

மேலும், கால்​வாய் நீர் தேங்​கிய​தால் கடும் துர்​நாற்​றத்​துடன் சுகாதார சீர்​கேடு ஏற்பட்டு, குழந்தை​கள், சிறு​வர்​களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்​டுள்​ளது. ஆனால், ஒரு மருத்துவ முகாம் கூட நடத்​தவில்லை. மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்​த​தால், நடவடிக்கை இருக்​கும் என எதிர்​பார்த்த நிலை​யில் ஏமாற்றமே மிஞ்​சி​யுள்​ளது.

மஞ்சள்​நீர் கால்​வா​யின் பக்கவாட்டு சுவர்களை உயர்த்தி, தரமாக அமைத்​தால், கால்​வாய் நீர் எங்கள் பகுதிக்​குள் நுழை​யாது. ஆனால், மாநக​ராட்சி நிர்​வாகம் எங்கள் பகுதியை கண்டு​கொள்​வ​தே​யில்லை. அதனால், சம்பந்​தப்​பட்ட துறை​களின் உயர் அதிகாரி​களாவது எங்களுக்கு புதிய குடி​யிருப்புகள் மற்றும் வெள்​ள ​​பா​திப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்றார்.

இதுகுறித்து, காஞ்​சிபுரம் மாநக​ராட்சி ஆணையர் நவீந்​திரன் கூறிய​தாவது: மஞ்சள்​நீர் கால்​வா​யின் பக்கவாட்டு சுவர் அமைக்​கும் பணிகள் நிறைவு பெற்​றால் ஆதிதிரா​விடர் மற்றும் அருந்​த​தியர் நகர் பகுதி​யில் வெள்​ள ​​பா​திப்பு ஏற்படுவது தடுக்​கப்​படும். எனினும், தாழ்வான பகுதியாக உள்ள​தால், சின்னவேப்​பங்​குளம் மற்றும் மின்​நகர் உள்ளிட்ட பிற பகுதி​களில் இருந்து கால்​வாய்களில் வெளி​யேறும் மழைநீரால், மேற்​கண்ட பகுதி​யில் வெள்​ள ​​பா​திப்பு ஏற்படும் நிலை உள்ளது.

அதற்கு, உரிய தீர்​வு​காணும் வகையில் திட்​ட​மிடப்​பட்டு வரு​கிறது. அதே​போல், வீட்டு வசதி மற்றும் குடிசை ​மாற்று வாரி​யம் மூலம் குடி​யிருப்புகளை அமைத்து தர​வும், சீரமைக்​க​வும், துறை அதிகாரி​களிடம் தெரிவிக்​கப்​பட்​டுள்ளது மருத்துவ ​மு​காம் உள்​ளிட்ட சு​காதார பணிகளை மேற்​கொள்ள நடவடிக்கை எடுக்​கப்​படும்​ என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x