Published : 16 Dec 2024 05:22 PM
Last Updated : 16 Dec 2024 05:22 PM

“திமுக எந்த அழுத்தத்தையும் திருமாவளவனுக்கு தரவில்லை” - எ.வ.வேலு திட்டவட்டம்

மதுரை நத்தம் சாலையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர் | படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

மதுரை: “தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்கக் கூடாது என்று திமுக எந்தவிதமான அழுத்தமும் தரவில்லை,” என்று அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

மதுரை கோரிப்பாளையம், மேலமடை சந்திப்பில் நடைபெறும் மேம்பால கட்டுமானப் பணிகளை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு நூலகப் பராமரிப்பு பணிகளை பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “மதுரை கோரிப்பாளையம் மேம்பாலப் பணி 25 சதவீதமும், மேலமடை சந்திப்பு மேம்பாலப் பணி 32 சதவீதமும் முடிவடைந்துள்ளன. 2 பாலங்களையும் 2025-ம் ஆண்டு இறுதிக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சாலைகளில் ஏற்படும் சேதங்கள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக ‘நம்ம சாலை’ என்ற செயலி உள்ளது. இதில் தெரிவிக்கப்படும் புகார்கள் மீது 48 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட நூல் வெளியீட்டு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்கக் கூடாது என்று திமுக எந்தவிதமான அழுத்தமும் தரவில்லை. யாரும் அழுத்தம் கொடுப்பதை திருமாவளவன் ஏற்க மாட்டார்.

மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தில் இதுவரை 13.60 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர். சராசரியாக நாள் ஒன்றுக்கு 2,650 பேர் வருகின்றனர். நூலகத்தில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.10 கோடி மதிப்பீட்டில் திறந்தவெளி அரங்கு அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வாசகர்கள் தாங்கள் கொண்டுவரும் சொந்த புத்தகங்களை வாசிப்பதற்கு ஏதுவாக தனி அரங்கு அமைக்கப்பட உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

அப்போது, அமைச்சர் பி.மூர்த்தி, பொதுப் பணித் துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா, எம்எல்ஏக்கள் கோ.தளபதி, பூமிநாதன், ஆட்சியர் சங்கீதா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x