Published : 16 Dec 2024 05:05 PM
Last Updated : 16 Dec 2024 05:05 PM
தமிழகத்தில் 2 மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணம் கணக்கெடுக்கப்படுகிறது. வீடுகளுக்கான மின்சாரம் 100 யூனிட் வரை இலவசமாக வழங்கப்படுகிறது. 101 யூனிட் முதல் 500 யூனிட் வரை மானியவிலையில் மின்சாரம் வழங்கப்படுகிறது. அதற்கு மேல் பயன்படுத்தினால் முழு கட்டணத்தை செலுத்த வேண்டும். 2 மாதங்களுக்கு ஒரு முறை மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படுகிறது. கணக்கு எடுத்த 20 தினங்களுக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும், இல்லையேல் மின் இணைப்பு துண்டிக்கப்படும். பின்னர் அபராதத்துடன் கட்டணத்தை செலுத்தியதும் மின் இணைப்பு வழங்கப்படும்.
மின் வாரியம், வீடுகளில், மின் பயன்பாட்டை பொறுத்து, 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூடுதல் வைப்பு தொகை வசூலிக்கிறது. இதன்படி அதிக மின் பயன்பாடு உள்ள வீடுகளில் தற்போது வைப்பு தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மின் கணக்கீட்டு ஊழியர்கள், 2 மாதங்களுக்கு மேல் அதாவது 60 நாட்களை கடந்த பிறகு மின் பயன்பாட்டை கணக்கீடு செய்து மின் கட்டணத்தை நிர்ணயம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து குரோம்பேட்டையை சேர்ந்த மருதன் கூறியதாவது: மின் கணக்கீட்டு ஊழியர்கள் 60 நாட்களுக்குள் வந்து கணக்கெடுக்காமல் பல நாட்கள் கழித்து தாமதமாக வருகின்றனர். இதனால், 2 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தப்படும் மின் கட்டணம் பல மடங்கு அதிகரிக்கிறது. 60 நாட்களுக்குள் மின் பயன்பாடு கணக்கெடுக்காமல் 70 நாட்களில் கணக்கெடுக்கும்போது மின் பயன்பாடும் அதிகரிக்கிறது.
இதனால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்து விடுகிறது. குரோம்பேட்டை மின் வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்துக்கு அதிகாரி இல்லை. பம்மல் செயற் பொறியாளர் கூடுதலாக கவனித்து வருகிறார். அவரை சந்திக்கவும் முடியவில்லை. எனவே 60 நாட்களுக்கு ஒருமுறை தவறாமல் மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும் வகையில் மின்வாரியதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், குரோம்பேட்டை அலுவலகத்தில் 2 பேர் உள்ளனர். ஒருவர் சரியாக பணி செய்யாததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஒருவர் மட்டுமே தற்போது பணியில் உள்ளார். ஒப்பந்த அடிப்படையில் சிலரை நியமித்து பணிகளை கவனித்து வருகிறோம்.
மின் கணக்கீட்டாளர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். மேலும் வேறு பல பணிகள் உள்ளதால் 60 நாட்களுக்கு ஒருமுறை கணக்கீடு செய்வதில் சற்று தாமதம் ஏற்படுகிறது. தாமதம் ஏற்படும் இடங்களில் 2 மாதங்களுக்கான சராசரி எடுத்து, அதில் காலதாமதமான நாட்களை கழித்தே மின்கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT