Published : 16 Dec 2024 04:48 PM
Last Updated : 16 Dec 2024 04:48 PM
சென்னையை புதுச்சேரியுடன் இணைக்கும் இரண்டு பிரதான சாலைகள் பழைய மகாபலிபுரம் சாலை (ராஜீவ் காந்தி சாலை) மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலை. இதில் ராஜிவ்காந்தி சாலை தற்போது ஐடி நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளால் நிறைந்துள்ளது. கிழக்கு கடற்கரை சாலையிலும் ஐடி நிறுவனங்கள், மிகப்பெரிய குடியிருப்புகள் மற்றும் ரிசார்ட்கள், பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பூங்காக்கள், திரையரங்குகள், மிகப்பெரிய மால்கள் என மக்கள் அதிகம் விரும்பும் பகுதியாகமாறியுள்ளது.
எனவே, சென்னை மற்றும் புறநகரில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கானனோர் வந்து செல்லும் சாலையாக மாறியுள்ளது. ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் இந்த இரு சாலைகளுக்கும் இடையில் பக்கிங்காம் கால்வாய் செல்கிறது. கால்வாயின் இருபுறமும், ஒஎம்ஆர் மற்றும் இசிஆர் சாலைகளை ஒட்டி பெரும் குடியிருப்புகள் நிறைந்துள்ளன. இருப்பினும், இரு சாலைகளுக்கும் இடையில் இணைப்பு சாலை என்பது மிகக் குறைவே.
இருசாலைகளும் சென்னையில் திருவான்மியூரில் இருந்தே தொடங்குகின்றன. இடையில் பெருங்குடி, சோழிங்கநல்லூர், கேளம்பாக்கம் ஆகிய இடங்களில் இணைப்பு சாலைகள் உள்ளன.a ஆனால், இவற்றுக்கிடையிலான தூரம் பல கி.மீட்டர்கள். இதில் பெருங்குடி பகுதியில் உள்ள இரு சிறிய சாலைகளில் ஒரு வாகனம் மட்டுமே செல்ல முடியும். பக்கிங்காம் கால்வாயை கடக்க அமைக்கப்பட்டுள்ள பாலமும் வாகன போக்குவரத்தை தாங்கக்கூடியதாக இல்லை.
இதற்கிடையில், சென்னை குரோம்பேட்டையில் இருந்து ஈச்சங்காடு வழியாக துரைப்பாக்கத்தை அடையும், ரேடியல் சாலையை கிழக்கு கடற்கரை சாலையுடன் இணைக்கும் விதமாக துரைப்பாக்கம் சந்திப்பில் இருந்து கிழக்கு கடற்கரை சாலைக்கு பக்கிங்காம் கால்வாய் வழியாக புதிய இணைப்பு சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.
தற்போது, துரைப்பாக்கம் ஓஎம்ஆர் சாலையில் இருந்து பக்கிங்காம் கால்வாய் வரை சாலை போடப்பட்டு, அந்த சாலையை ‘வாக்கிங்’ செல்வோர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், அதற்கு பின் பணிகள் நடைபெறாமல் நிறுத்தி வைப்பட்டுள்ளது.
இந்நிலையில், இத்திட்டம் குறித்து, சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் வரதன் அனந்தப்பன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் நெடுஞ்சாலைத்துறை இடமிருந்து தகவல் பெற்றுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: இந்த சாலை பணிகள் 2 கட்டங்களாக திட்டமிடப்பட்டுள்ளது.
முதல் கட்டத்தில் துரைப்பாக்கம் சந்திப்பில் இருந்து பக்கிங்காம் கால்வாய் வரை இணைப்பு சாலை மற்றும் பாலம் கட்டுமான பணி. அடுத்த கட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் நீலாங்கரை பகுதியுடன் இணைக்கும் இணைப்பு சாலை. இப்பணிக்காக கடந்த 2020-ம் ஆண்டு அரசாணை போடப்பட்டு, ரூ.204.20 கோடி நிதி ஒக்கப்பட்டுள்ளளது.
முதல் கட்டத்தில், தற்போது துரைப்பாக்கத்தில் இருந்து பக்கிங்காம் கால்வாய் வரையிலான இணைப்பு சாலை பணி முடிந்துள்ளது. பக்கிங்காம் கால்வாயில் பாலம் கட்டப்பட வேண்டியுள்ளது. 2-ம் கட்டத்தில், இணைப்பு சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, 2-ம் கட்ட பணிக்கு தேவைப்படும் 11,085 சதுர மீட்டர் நிலத்தை கையகப்படுத்த ரூ.142 கோடி நிதி ஒதுக்கப்பட்டுவிட்டது.
தற்போது நில எடுப்பு பணி, கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த தலைமை பொறியாளர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் நடைபெற்று வருவதால், பணிகள் முடிந்ததும் சாலை பணிகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கப்பட்டு பல ஆண்டுகளாகியுள்ள நிலையில், விரைவில் நில எடுப்பு பணிகளை முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment