Last Updated : 16 Dec, 2024 04:08 PM

 

Published : 16 Dec 2024 04:08 PM
Last Updated : 16 Dec 2024 04:08 PM

கட்சியெல்லாம் அப்புறம் தான்... காசு இருந்தா கரை ஏறிக்கோ! - புதுச்சேரியில் தேர்தலுக்காக முளைக்கும் அரசியல் கோஷ்டிகள்

யாருக்கும் எந்தக் கட்சியும் நிரந்தரம் இல்லை என்பதுதான் புதுச்சேரி அரசியல் களத்தின் கடந்த கால வரலாறு. அதன்படி, 2026 சட்டப்பேரவைத் தேர்தலைக் கணக்குப் போட்டு இங்கே ஆளாளுக்கு தனி அணி திரட்டிக் கொண்டிருக்கிறார்கள். புதுச்​சேரி​யில் கூட்டணி ஆட்சி நடத்​தும் என்.ஆர்​.​காங்​கிரசுக்​கும் பாஜக​-வுக்​கும் நீண்ட நாட்​களாகவே சுமுகமான உறவு இல்லை.

அமைச்சர் பதவி, வாரியத் தலைவர் பதவிகள் கிடைக்காத பாஜக எம்எல்​ஏ-க்கள் டெல்​லிக்கே சென்று முதல்வர் ரங்க​சாமி மீது புகார் வாசித்து​விட்டு வந்தார்​கள். இதையெல்​லாம் பார்த்து​விட்டு, “பாஜக வேண்​டாம்​ணே... தனித்தே நிற்​போம்” என என்.ஆர்​.​காங்​கிரஸ் காரர்​களும் முதல்வர் ரங்க​சாமிக்கு தூபம் போட்டுக் கொண்​டிருக்​கிறார்​கள்.

இதே மனநிலை​யில் இருக்​கும் ரங்க​சாமி​யும் மாநிலத்​தில் தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணிக்கு தலைவராக இருந்​தும் கூட்​ட​ணிக் கட்சிகள் கூட்​டத்தை இதுவரை ஒரு முறைகூட கூட்​டாமல் இருக்​கிறார்.

தங்களுக்கு வாரியத் தலைவர் பதவி கிடைக்​காத​தால் ரங்க​சாமி மீது அதிருப்​தி​யில் இருக்​கும் பாஜக எம்எல்​ஏ-க்​களான ஜான்​கு​மார், ரிச்​சர்ட், கல்யாணசுந்​தரம், பாஜக ஆதரவு சுயேட்சைகள் அங்காளன், சிவசங்​கர், கொல்​லப்​பள்ளி சீனிவாச அசோக் ஆகியோர் லாட்டரி அதிபர் மார்ட்​டின் மகன் ஜோஸ் சார்லஸ் தலைமை​யில் தனி அணி ஒன்றை அமைத்​துள்ளனர்.

இவர்கள் ஆளாளுக்கு ஒரு தொகு​தியை பிரித்​துக் கொண்டு அங்கு களமிறங்க காய்​நகர்த்தி வருகிறார்​கள். அதற்காக இப்போதே பணத்தை வாரி இறைக்​கிறார்​கள். தமிழகத்​தைப் போலவே இங்கும் இண்டியா கூட்டணி கட்டுக்​கோப்பாக உள்ளது. அதனால், கட்சியை விட்டு வெளியே போனவர்கள் மீண்​டும் திரும்பி வந்தால் சேர்ப்​ப​தில்லை என்று திடமாக இருக்​கிறது காங்​கிரஸ். இருந்த போதும் ஆளும் கூட்டணி எம்எல்​ஏ-க்கள் சிலர் காங்​கிரசுக்கு தூது​விட்​டபடி இருக்​கிறார்​கள்.

ஆலோசனையில் மூவர் கூட்டணி

இதுபற்றி காங்​கிரஸ் எம்பி-யான வைத்​திலிங்​கத்​திடம் கேட்​டதற்கு, “ஆளுங்​கட்​சி​யில் இருந்து அந்த எம்எல்ஏ வருகிறார், இந்த எம்எல்ஏ வருகிறார், கட்சி மாற தயாராக இருக்​கிறார்கள் என்றெல்​லாம் சொல்​கிறார்​கள். ஆனால், அவர்கள் தயாராக இருந்​தா​லும் நாங்கள் சேர்த்​துக் கொள்ள தயாராக இல்லை” என்றார்.

பிரதான எதிர்க்​கட்​சியான திமுகவோ தமிழகத்​தில் திமுக அணிக்கு இருக்​கும் செல்​வாக்கு தங்களுக்​கும் சாதகமாக இருக்​கும் என்ப​தால் அமைதி​காக்​கிறது. அதிமுக-​வும் இங்கு தனது இருப்​பைக் காட்​டிக்​கொள்ள மக்கள் பிரச்​சினை​களுக்காக குரல் கொடுக்​கிறது. ஆனால், தமிழகத்​தில் அதிமுக வலுவான கூட்​ட​ணியை கட்டமைப்​ப​தைப் பொறுத்தே இவர்​களுக்கான எதிர்​காலம் இருக்​கும்.

இந்நிலை​யில், புதுச்​சேரி அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் ரங்க​சாமி ஆதரவு சுயேட்சை எம்எல்​ஏ-வான நேரு, கட்சி நடவடிக்கைகளை விட்டு விலகி இருக்​கும் பாஜக முன்​னாள் மாநிலத் தலைவர் சாமி​நாதன், அதிமுக முன்​னாள் எம்எல்​ஏ-வான வையாபுரி மணிகண்டன் ஆகியோர் தனியாகச் சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்​கிறார்​கள்.

இதுபற்றி நேரு​விடம் கேட்​டதற்கு, “அரசின் தவறுகளை நாங்கள் சுட்​டிக்​காட்டு​கிறோம். புதுச்​சேரியை சிலர் விலைபேசி விற்க முயல்​கிறார்​கள். அதனால் இங்கு ஊழல் மலிந்​து​விட்​டது. ‘ரெஸ்டோ பார்​’களால் மக்கள் வாழ முடியாத ஊராக புதுச்​சேரியை மாற்றி வருகின்​றனர். இதையெல்​லாம் சரிசெய்ய ஒத்த கருத்​துடைய நாங்கள் ஆலோசனை நடத்​தினோம்.

ஓரணியாக இணைந்து செயல்பட திட்​ட​மிட்​டுள்​ளோம். எங்களோடு வேறு சில கட்சிகளில் இருந்து இன்னும் சிலரும் வரதயாராக உள்ளனர். ஒத்த கருத்​துடைய​வர்கள் ஒன்றாக இணைந்து தேர்​தலில் ​போட்​டியிட ஆலோசனை நடத்தி வரு​கிறோம்” என்​றார். தேர்​தலுக்​குள்ளாக புதுச்​சேரி அரசி​யலில் கட்​சிகளை புறந்​தள்​ளி​விட்டு ​காசு இருப்​பவர்​கள் கரை சேர எத்தனை அணிகளை உரு​வாக்​கப் ​போகிறார்​களோ... ​யாருடன் ​யார் கைகோக்​கப் ​போகிறார்​களோ... ​பார்​க்​கலாம்​!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x