Published : 16 Dec 2024 04:17 PM
Last Updated : 16 Dec 2024 04:17 PM

“தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம் வெள்ளையாக்கப்பட்ட ஜாபர் சாதிக் பணம்” - அண்ணாமலை குற்றச்சாட்டு

அண்ணாமலை | கோப்புப்படம்

சென்னை: “சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனும், திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக், போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை வெள்ளையாக்குவதற்கு, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தைப் பயன்படுத்தியுள்ளது அமலாக்கத் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும்,” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனும், திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக், போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை வெள்ளையாக்குவதற்கு, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தைப் பயன்படுத்தியுள்ளது அமலாக்கத் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜாபர் சாதிக்கின் நிறுவனமான ‘கோயலென்ஸ் வெஞ்ச்சர்’ (Coalescence Ventures) என்ற நிறுவனம், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தின் ஒப்பந்ததாரர் நிறுவனமான ‘ஸ்ரீ அப்பு டைரக்ட்’ (Sri Appu Direct) என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, பொருட்களை வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

ஜாபர் சாதிக், போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை, 2022 -2023 காலகட்டத்தில், தனது ‘கோயலென்ஸ் வெஞ்ச்சர்’ நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பது, அமலாக்கத் துறை விசாரணையில் வெளிவந்துள்ளது. இதே காலகட்டத்தில்தான், ‘ஸ்ரீ அப்பு டைரக்ட்’ நிறுவனம், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்துடன் ஒப்பந்தம் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தத்துக்கான பொருட்களை வழங்கியது, ஜாபர் சாதிக்கின் ‘கோயலென்ஸ் வெஞ்ச்சர்’ நிறுவனம் ஆகும்.

குறிப்பிட்ட காலகட்டத்தில், திமுக நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக், போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை, வெள்ளையாக்குவதற்கு, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் மறைமுகமாக உதவி செய்துள்ளதாகவே இதன் மூலம் தெரிய வருகிறது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இது குறித்து விளக்கமளிக்க வேண்டும்.” என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x