Published : 16 Dec 2024 02:53 PM
Last Updated : 16 Dec 2024 02:53 PM

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், துணை முதல்வர் குறித்து அவதூறு: மடம் சார்பில் காவல்துறையில் புகார்

கோப்புப் படம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் மற்றும் துணை முதல்வர் குறித்து அவதூறு பரப்பியதாக ரங்கராஜன் நரசிம்மன், யூடியூப்பர் பெலிக்ஸ், இயக்குநர் களஞ்சியம் ஆகியோர் மீது மடம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் நிர்வாகி(ஶ்ரீகார்யம்) சக்திவேல் ராஜன் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் தெரிவித்துள்ளதாவது: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கடந்த ஜூன் 17-ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் நடந்த ராமானுஜர் புத்தக வெளியீட்டு விழாவில் ஆழ்வார்திருநகரி மற்றும் ஶ்ரீபெரும்புதூர் ஜீயர்களுடன் ஶ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் 24-வது பீடாதிபதி சடகோப ராமானுஜ ஜீயர் கலந்து கொண்டார்.

அப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வீட்டிற்கு சென்ற 3 ஜீயர்களுக்கு அவர் பாதபூஜை செய்ததாகவும், ஶ்ரீவைஷ்ணவ சம்பிரதாயங்களுக்கு எதிராக ஜீயர்கள் நடந்து கொண்டதாக உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை வீடியோவாக பேசி சமூக வலையதளங்களில் பதிவிட்ட ரெங்கராஜன் நரசிம்மன் என்பவரும், இந்து மத நம்பிக்கைகளை இழிவு படுத்தும் வகையில் யூடியூப்பில் பெலிக்ஸ் ஜெரால்ட், இயக்குநர் களஞ்சியம் ஆகியோர் பேசி வீடியோ வெளியிட்டு உள்ளனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த ராமானுஜர் புத்தக வெளியீட்டு விழாவில் மட்டுமே ஜீயர் கலந்து கொண்ட நிலையில் உண்மைக்கு புறம்பாக வேண்டுமென்றே திட்டமிட்டு மடத்தின் புகழுக்கும், சடகோப ராமானுஜ ஜீயரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளது பக்தர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பொய்யான தகவலை வைத்து மடத்திற்கு எதிராக சிலர் கலவரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் மடத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பொய்யான தகவல்களை வெளியிட்டு பொது அமைதி குந்தகம் விளைவித்து, மடத்தின் சொத்துக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்திய ரங்கராஜன் நரசிம்மன், யூடியூப்பர் பெலிக்ஸ் ஜெரால்டு, களஞ்சியம் ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை எடுத்து, மடத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x