Published : 16 Dec 2024 06:24 AM
Last Updated : 16 Dec 2024 06:24 AM
சென்னை: சென்னை மியூசிக் அகாடமியின் 98-வது இசை விழா நேற்று தொடங்கியது. தொடக்க விழாவில் ஒடிசா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.முரளிதர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கிவைத்தார்.
மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் டி.எம்.கிருஷ்ணாவுக்கு, ‘தி இந்து’ குழுமம் வழங்கும் 1 லட்ச ரூபாய் பணமுடிப்புடன் கூடிய சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதை அளித்து சிறப்புரை ஆற்றினார்.
விழாவில் அவர் பேசியதாவது: கலைஞர்கள், அவர்கள் வாழும் காலத்திலேயே கொண்டாடப்பட வேண்டும், கவுரவிக்கப்பட வேண்டும். மாபெரும் நகைச்சுவை மன்னனாக இன்று கொண்டாடப்படும் சார்லி சாப்ளின், வாழும் காலத்தில் கொண்டாடப்படவில்லை.
இங்கும் வீணை தனம்மாள், நாகசுர சக்கரவர்த்தி டி.என்.ராஜரத்னம், புல்லாங்குழல் மாலி, எம்.டி.ராமநாதன், வீணை எஸ்.பாலசந்தர், லால்குடி ஜெயராமன் உள்ளிட்டவர்கள் அவர்கள் வாழும் காலத்தில் கவுரவிக்கப்படவில்லை. அந்த பட்டியலில் டி.எம். கிருஷ்ணாவையும் சேர்க்காமல், சங்கீத கலாநிதி விருதுக்கு அவரை தேர்ந்தெடுத்ததற்கு மியூசிக் அகாடமிக்கு நன்றி. இவ்வாறு அவர் பேசினார்.
டி.எம்.கிருஷ்ணா தனது ஏற்புரையில், “தி இந்து குழுமம் வழங்கியிருக்கும் ‘சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது’, அங்கீகாரம் தரக்கூடிய ஒரு விருது என்பதை தாண்டி எனக்கு கிடைத்திருக்கும் அவரது ஆசியாக கருதுகிறேன். இந்த விருது எனது பொறுப்புணர்வை இன்னும் அதிகரிக்கும்” என்றார். மியூசிக் அகாடமியின் ஆண்டு மலரை நீதிபதி எஸ்.முரளிதர் வெளியிட, டி.எம்.கிருஷ்ணா பெற்றுக்கொண்டார்.
முன்னதாக வரவேற்புரை ஆற்றிய மியூசிக் அகாடமி தலைவர் என்.முரளி பேசியதாவது:மக்களுக்கு பலன் அளிக்கும் பல தீர்ப்புகளை வழங்கியவர் நீதிபதி எஸ்.முரளிதர். இந்த ஆண்டுக்கான மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருதை 2025 ஜனவரி 1-ம் தேதி டி.எம். கிருஷ்ணா பெறுவார்.
80 இசை நிகழ்ச்சிகள்: சங்கீத கலா ஆச்சார்யா விருதை பிரபல மிருதங்க வித்வான் பாறசாலா ரவி, விதூஷி கீதாராஜா பெறுவார்கள். டிடிகே விருதை, திருவையாறு சகோதரர்களான பாகவதர்கள் எஸ்.நரசிம்மன், எஸ்.வெங்கடேசன், வயலின் வித்வான் ஹெச்.கே.நரசிம்மமூர்த்தி பெறுகின்றனர். இசை அறிஞர் விருதை டாக்டர் மார்கரெட் பாஸ்டின் பெறுகிறார்.
இந்த ஆண்டு மார்கழி இசை விழாவில் 80 இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மோகினி ஆட்டக் கலைஞர் டாக்டர் நீனா பிரசாத் இந்த ஆண்டுக்கான நிருத்ய கலாநிதி விருதை ஜனவரி 3-ல் தொடங்கும் மியூசிக் அகாடமியின் 18-வது நாட்டிய விழாவில் பெற உள்ளார். நாட்டிய விழா ஜனவரி 9 வரை நடைபெறும். இவ்வாறு அவர் பேசினார். மியூசிக் அகாடமி செயலாளர் மீனாட்சி, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். செயலாளர் வி.ஸ்ரீகாந்த் நன்றியுரை வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT