Published : 16 Dec 2024 06:10 AM
Last Updated : 16 Dec 2024 06:10 AM
சென்னை: இயற்கை சீற்றங்களில் இருந்து கோயில்களை பாதுகாக்க வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டிலேயே அதிகமான கோயில்களை கொண்டுள்ளது தமிழகம்தான். சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாகவும், நமது பாரம்பரியத்தை நிலைநாட்டவும், ஆயிரக்கணக்கான கோயில்கள், நமது முன்னோர்களால் கட்டப்பட்டது.
ஆனால், தற்போது கோயில்களை நிர்வகித்து வரும் இந்து சமய அறநிலையத்துறை, இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு முன்கூட்டியே திட்டங்களை வகுத்து கோயில்களை பாதுகாக்கத் தவறுகிறது.
தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கோயில்களின் நிலைமை அவலநிலையாகவே உள்ளது. தமிழக அரசுக்கும், அறநிலையத்துறைக்கும் மழைக்காலங்களில் தண்ணீரை சேமிக்கும் நீர் மேலாண்மை குறித்த சிறப்பு திட்டங்கள் எதுவும் இல்லை. மழைநீர் தேங்குவதால் பழமையான கோயில்களின் சுவர்கள் அரிக்கப்படுகிறது.
மேலும், கோயில்களை சுற்றியுள்ள பகுதிகளில் சாலைகளை உயரப்படுத்தி அமைத்து விடுகின்றனர். அதன்காரணமாக கோயில் கீழே சென்று விடுவதால் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குவதை தவிர்க்க முடிவதில்லை. தேங்கிய மழை நீரை வெளியேற்ற தமிழக அரசு, சுற்று வேலிகள் அமைத்தல், மழைநீர் தனியாக செல்ல குழாய்கள் அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்வதில்லை.
தற்போது உள்ள தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி மழைநீர் கோயிலுக்குள் வராதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய முடியும். ஆனால் பக்தர்களின் உண்டியல் பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொள்ளும் அறநிலையத்துறைக்கு இதைப் பற்றி யோசிக்க நேரமில்லை என்றே தோன்றுகிறது.
இப்படித் தொடர்ந்து கோயில்களின் விஷயத்தில் அலட்சியப் போக்கை காட்டும் அரசும், அறநிலையத்துறையும் இயற்கை சீற்றங்களில் இருந்து கோயில்களை பாதுகாக்க முன்கூட்டியே திட்டமிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT