Last Updated : 15 Dec, 2024 10:48 PM

 

Published : 15 Dec 2024 10:48 PM
Last Updated : 15 Dec 2024 10:48 PM

இஸ்ரோவின் விண்வெளி ஆய்வு மைய திட்டத்துக்கான ஸ்பேடெக்ஸ் விண்கலன்: இம்மாத இறுதியில் செலுத்தப்படுகிறது

சென்னை: இஸ்ரோவின் விண்வெளி ஆய்வு மைய திட்டத்துக்கான முன்னோட்டமாக ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலமாக இந்த மாத இறுதியில் ஏவப்படுகிறது.

விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு அரிய சாதனைகளை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) படைத்து வருகிறது. அதனுடன் வணிகரீதியாகவும் வெளிநாட்டு செயற்கைக் கோள்களை விண்ணில் நிலைநிறுத்தி உலக சந்தையில் முன்னணி அமைப்பாக திகழ்கிறது. இதற்கிடையே எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு சந்திரயான்-4, ககன்யான் உட்பட பல ஆய்வுத் திட்டங்களை செயல்படுத்தும் முனைப்பில் இஸ்ரோ தீவிரம் காட்டிவருகிறது.

இதுதவிர பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன் எனும் இந்திய ஆய்வுவிண்வெளி மையத்தையும் 2035-ம் ஆண்டுக்குள் விண்ணில் நிறுவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதற்கான முன்தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்ஒருபகுதியாக ஸ்பேடெக்ஸ் திட்டம் (SPADEX–Space Docking Experiment) தற்போது செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின்படி விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக தலா 400 கிலோ எடை கொண்ட சேசர் மற்றும் டார்கெட் எனும் 2 விண்கலன்களை இஸ்ரோ வழிகாட்டுதலில் தனியார் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

இந்த இரட்டை விண்கலன்கள் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் வாயிலாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த விண்கலன்கள் புவியில் இருந்து சுமார் 700 கி.மீ தூரம் கொண்ட வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் நிலைநிறுத்தப்பட உள்ளன. அதன்பின் அவற்றை ஒன்றிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். தற்போது ராக்கெட் பாகங்கள் ஒருங்கிணைப்பு, அதில் விண்கலன்களை பொருத்துதல் உள்ளிட்ட பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். திட்ட ஆய்வுக் குழுவின் ஒப்புதல் கிடைத்தவுடன் ஏவுதலுக்கான செயல்பாடுகள் முடுக்கிவிடப்பட இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x