Published : 15 Dec 2024 06:45 PM
Last Updated : 15 Dec 2024 06:45 PM
திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை பெய்து ஓய்ந்தநிலையில், பகலிலேயே அடர்ந்த பனிமூட்டம் காரணமாக வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டுச் செல்லும்நிலை ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக தொடர் மழைபெய்தது. மழை ஓய்ந்தநிலையில், பகலிலேயே பனி மூட்டம் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு அதிகம் காணப்படுகிறது. கொடைக்கானல் பேருந்து நிலையம், அண்ணாசாலை, லாஸ்காட் சாலை, கோக்கர்ஸ்வாக் சாலை, மூஞ்சிக்கல், ஆனந்தகிரி, கல்லறை மேடு, உகார்த்தேநகர் உள்ளிட்ட நகர்ப்பகுதிகளிலும், வத்தலகுண்டு- கொடைக்கானல், கொடைக்கானல்-பழநி பிரதான மலைச்சாலைகளிலும் பகலிலேயே அடர்ந்த பனி மூட்டம் காணப்படுகிறது.
அடர்ந்த பனி மூட்டம் காரணமாக எதிரே வாகனங்கள் தெரியாததால் வாகனங்கள் குறைந்த வேகத்திலேயே சிரமத்துடன் இயக்கப்படுகின்றன. வாகனத்தில் உள்ள முகப்பு மஞ்சள் விளக்குகளை எரியவிட்டு செல்கின்றனர். மஞ்சள் விளக்குகளை பொருந்தாதவர்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டுச் செல்கின்றனர்.
மேகக்கூட்டங்கள் தரையிறங்கி சாலைகளில் கடந்து செல்லும்போது எதிரே நடந்து வருபவர் கூட கண்ணுக்கு தெரியாதநிலை உள்ளது. மழை நின்றதால் தற்போது குளிர் காலம் துவங்கிவிட்ட நிலையில் மலைப்பகுதிகளில் பகலிலேயே அதிக குளிர் காணப்படுகிறது. சுவட்டர் அணிந்தபடி தான் உள்ளூர் மக்களே நடமாடுகின்றனர்.
தொடர் மழை மற்றும் குளிர் காரணமாக கொடைக்கானலுக்கு வழக்கமாக வாரவிடுமுறை நாட்களில் வந்துசெல்லும் சுற்றுலாபயணிகளின் எண்ணிக்கை மிக குறைவாக காணப்பட்டது. இதனால் சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. கொடைக்கானலில் நேற்று அதிகபட்ச வெப்பநிலையாக பகலில் 23 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலையாக இரவில் 16 டிகிரி செல்சியஸும் நிலவுகிறது.
காற்றில் ஈரப்பதம் 68 சதவீதம் காணப்படுவதால் பகலிலேயே குளிர் நிலவுகிறது. மார்கழி மாதம் துவங்கிய நிலையில், வரும் நாட்களில் இரவில் வெப்பநிலை மேலும் குறைந்து குளிரின் தாக்கம் அதிகம் இருக்கும் என தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT