Last Updated : 13 Jul, 2018 06:06 PM

 

Published : 13 Jul 2018 06:06 PM
Last Updated : 13 Jul 2018 06:06 PM

சேலத்தில் இரண்டு கோயில்களில் கொள்ளை: அம்மன் சிலையில் இருந்த வெள்ளி கிரீடம் திருட்டு

சேலத்தில் இரண்டு கோயில்களில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றன.

சேலம் 5 ரோடு அருகில் திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை பூசாரி வந்து அம்மனுக்கு பூஜை செய்துவிட்டு வெளியில் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்கள் கோயிலுக்கு வந்தனர். பிறகு அந்த இளைஞர்களில் ஒருவர் கோயிலுக்குள் புகுந்து அம்மன் சிலையில் இருந்த வெள்ளி கிரீடம் மற்றும் நவபாசன பாம்பு கிரீடம் மற்றும் ஒரு சவரன் தங்க காதணியை திருடிக்கொண்டு தப்பி வெளியில் வந்து மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்று விட்டனர்.

கோயில் பூசாரியும், பொதுமக்களும் திருடர்களைப் பிடிக்க முயன்றனர். ஆனால் திருடர்கள் இருவரும் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர். பின்னர் இந்த துணிகர திருட்டு குறித்து சேலம் பள்ளப்பட்டி காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசித் தேடி வருகிறார்கள்.

மற்றொரு கொள்ளை சம்பவம்

சேலம் அம்மாப்பேட்டை மெயின் ரோடு அருகில் குண்டுபிள்ளையார் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் வியாழக்கிழமை நள்ளிரவு திருடர்கள் வந்து கோயில் முன்புறம் உள்ள இரும்பு கேட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் கோயிலுக்குள் இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் மற்றும் காசுகளைத் திருடிச் சென்று விட்டனர் .

இதுகுறித்து கோயில் பூசாரி அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார் . இதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த கோயிலில் சிசிடிவி கேமரா வைக்கப்பட்டுள்ளது. இதை போலீஸார் ஆய்வு செய்தனர் . அப்போது முகமூடி அணிந்த இரண்டு இளைஞர்கள் கோயிலுக்குள் வருகிறார்கள். பிறகு கடப்பாரையால் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்து உண்டியலை உடைத்து அதில் இருந்த சில்லறைக் காசுகள் மற்றும் ரூபாய் நோட்டுக்களை எடுத்துச் செல்வது பதிவாகி இருந்தது.

இதில் பதிவாகி உள்ள திருடர்களின் உருவங்களை வைத்து அவர்கள் யார் என தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. சேலத்தில் அடுத்தடுத்து கோயில்களில் திருடர்கள் திருடி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, “இரவு நேரங்களில் கூடுதலாக காவல்துறையினர் ரோந்து வந்து கண்காணிக்க வேண்டும். கோயில்கள், ஏடிஎம் மையங்கள் மற்றும் வங்கிகளில் உள்ள பகுதிகளுக்கு காவலர்கள் அடிக்கடி வந்து கண்காணிக்க வேண்டும். இரவில் கூடுதலாக வரவும் வழிவகை செய்ய வேண்டும்” என்றனர். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x